தட்டார்மடம் அருகேகாலிகுடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
தட்டார்மடம் அருகே காலிகுடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தட்டார்மடம்:
தட்டார்மடம் அருகே கலியன்விளை கிராம மக்கள் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணக்கோரி நேற்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிநீர் தட்டுப்பாடு
தட்டார்மடம் அருகே உள்ள அரசூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கலியன்விளை கிராமத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு காணக்கோரி கிராம மக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கிராம மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பல கி.மீ. தூரம் சென்று கிராம பெண்கள் குடிநீர் எடுத்து வரும் அவலநிலை உள்ளது.
இந்தநிலையில், கலியன்விளை கிராமத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மோட்டார் வசதியுடன் கூடிய ஆழ்துளை கிணறு அமைக்க சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.3.71 லட்சத்தை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. ஒதுக்கியுள்ளார். ஆனால் சாத்தான்குளம் யூனியன் அதிகாரிகள் இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர்.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலையில் காலி குடங்களுடன் உடன்குடி-திசையன்விளை மெயின் ரோட்டுக்கு திரண்டு சென்றனர். அங்கு காலிகுடங்களை அடுக்கி வைத்தவாறு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அந்த ரோட்டில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு தலைமையில் போலீசார் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சாத்தான்குளம் யூனியன் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண உறுதி அளித்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று கிராம மக்கள் திட்டவட்டமாக கூறினர். இதை தொடர்ந்து போலீசார், யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாசாணம் ஆகியோரை அப்பகுதிக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதிகாரிகள் உறுதி
அப்போது, எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நாளை(இன்று) ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடங்கி விரைவாக முடித்து குடிநீர் வினியோகத்துக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.