தட்டார்மடம் அருகே கிராமமக்கள் போராட்டம் கைவிடப்பட்டது.
தட்டார்மடம் அருகே அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், கிராம மக்கள் போராட்டம் கைவிடப்பட்டது
தட்டார் மடம்:
தட்டார்மடம் அருகே அரசூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 8 நாட்களாக இப்பகுதியில் குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இதனால் தச்சன்விளை, பனைவிளை, அண்ணாநகர், கலியன்விளை, பள்ளந்தட்டு, மாணிக்கபுரம், ஆனந்தவிளை ஆகிய கிராமங்களில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும், ஏரல், குரங்கணி, உடன்குடி, அரசூர் குடிசை குடிநீர் திட்டத்தின் கீழ் அரசூரில் ஒரு லட்சம் லிட்டர் தரைநிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு தண்ணீர் ஏற்றப்படாமல் இருந்து வருகிறதாம். இதற்கு காரணமான குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை கண்டித்து இடைச்சிவிளை - திசையன்விளை சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என கிராம மக்கள் அறிவித்தனர். இதனையடுத்து அரசூர் ஊராட்சித் தலைவர் தினேஷ் ராஜசிங் தலைமையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குரூஸ் மைக்கேல், வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டக்குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தச்சன்விளை குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு உடனடியாக குடிநீர் விநியோகிக்கப்படும். பொத்தகாலன்விளை குடிநீர் ஏற்றும் நிலையத்தில் புதிய மோட்டார் பொருத்தப்பட்டு புதன்கிழமை முதல் சீரான குடிநீர் விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தெடர்ந்து போராட்டத்தை பொதுமக்கள் கைவிடுவதாக அறிவித்தனர்.