திருவெண்ணெய்நல்லூர் அருகே மினிவேனில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் டிரைவருக்கு போலீஸ் வலைவீச்சு
திருவெண்ணெய்நல்லூர் அருகே மினி வேனில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாமதி, சப்-இன்ஸ்பெக்டர் கவியரசன் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள அண்ட்ராயநல்லூர் ஏரிக்கரை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு மினி வேனை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்தபோது போலீசாரை பார்த்ததும் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு அதன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். பின்னர் அந்த மினி வேனை சோதனை செய்ததில் 50 கிலோ எடை கொண்ட 40 சாக்கு மூட்டைகளில் 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பறிமுதல்
விசாரணையில் தப்பி ஓடிய டிரைவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகா செட்டித்தாங்கல் பகுதியை சேர்ந்த ராஜவேல் என்பதும், திருக்கோவிலூர் பகுதியில் இருந்து கள்ளக்குறிச்சியில் உள்ள கோழிப்பண்ணைக்கு ரேஷன் அரிசியை கடத்திச்செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகளையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய ராஜவேலை போலீசார் தேடி வருகின்றனர்.