திருவெண்ணெய்நல்லூர் அருகேலாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்


திருவெண்ணெய்நல்லூர் அருகேலாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 27 Dec 2022 6:45 PM GMT (Updated: 27 Dec 2022 6:45 PM GMT)

திருவெண்ணெய்நல்லூர் அருகே லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர்,

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரிக்கு மணல் அள்ள செல்லும் லாரிகள் ஆலங்குப்பம் கிராமத்தில் நிறுத்தி வைக்கப்படும். பின்னர் அதில் ஒவ்வொரு லாரிக்கும் சீட்டு வழங்கப்பட்டு, மணல் அள்ள வரிசையாக அனுப்பி வைக்கப்படும்.

அந்த வகையில் நேற்று லாரிகளுக்கு சீட்டு வழங்கப்பட்டு மணல் அள்ள அனுப்பப்பட்டது. அப்போது அந்த இடத்திற்கு சிறிது தூரத்தில் லாரி சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஒருவர் மீது லாரி மோதியது. இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுபற்றி அறிந்த ஆலங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் ராமையா மற்றும் பொதுமக்கள் லாரிகள் நிறுத்தும் இடத்தை முற்றுகையிட்டனர். மேலும் அந்த வழியாக சென்ற லாரிகளையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் தாசில்தார் பாஸ்கர தாஸ், போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் இப்பகுதி வழியாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் சென்று வருவதால் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

அதற்கு போலீசார், இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story