திருச்செந்தூர் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து பள்ளி ஆசிரியை காயம
திருச்செந்தூர் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து பள்ளி ஆசிரியை காயம அடைந்தார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே கீழநாலுமூலைக்கிணற்றில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இருக்கிறது. இதன் மூலம் அந்த பகுதிக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இப்பள்ளியில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் அரசு சார்பில் 6 ஆசிரியர்களும், பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் 3 ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். இங்கு போதிய அளவு கட்டிட வசதி இல்லாததால் பள்ளி வளாகத்தில் உள்ள மேல்நிலை குடிநீர்த்தொட்டி அருகிலும், மரத்தடியிலும் அமர்ந்தும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தால் நியமிக்கப்பட்ட ஆசிரியை சத்யா பள்ளி வளாகத்தில் பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் கான்கிரீட் சுவர் இடிந்து ஆசிரியை சத்யா தலையில் விழுந்துள்ளது. இதில் தலையில் காயமடைந்த சத்யா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பழுதடைந்துள்ள இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பள்ளி வளாகத்தில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்தி மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.