தூத்துக்குடி அருகே மீன் வியாபாரி கொலையில் 3 வாலிபர்கள் சிக்கினர்
தூத்துக்குடி அருகே மீன் வியாபாரி கொலையில் 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஓட்டப்பிடாரம்:
தூத்துக்குடி அருகே மீன் வியாபாரி படுகெலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான அவரது நண்பரை போலீசார் தேடிவருகின்றனர்.
மீன்வியாபாரி
தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தை சேர்ந்த லிங்கபாண்டி மகன் சின்னத்துரை (வயது 37). மீன் வியாபாரி. இவர் தூத்துக்குடி ராஜிவ்நகர் 6-வது தெருவில் மீன்கடை நடத்தி வந்தார். இவர் கடந்த 12-ந்தேதி தட்டப்பாறை அருகே உள்ள வடக்கு சிலுக்கும்பட்டியில் உள்ள ஆட்டுப்பண்ணையில் தலை துண்டித்துக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இச்சம்பவம் குறித்து தட்டப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து நடத்தி வருகின்றனர்.
தனிப்படை
இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்கு தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவண பாலாஜி உத்தரவின் பேரில் தூத்துக்குடி ரூரல் உதவி போலீஸ் சூப்பிரண்டு சன்டீஸ் மேற்பார்வையில் புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி, தட்டப்பாறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் தனிப்போலீஸ் படை அமைக்கப்பட்டது. இப்போலீஸ் படையினர் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
காரணம் என்ன?
விசாரணையில், ஆட்டுப் பண்ணையில் வேலை பார்த்து வந்த சின்னத்துரை நண்பரான திருச்செந்தூர் தாங்கியூரை சேர்ந்த சுயம்புலிங்கம் தலைமறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.
அவரது செல்போன் எண் பதிவுகள் மூலம்மதுரை வல்லாகுளம் முருகன் மகன் மாரிகிருஷ்ணன் (30), தூத்துக்குடி அண்ணாநகர் அடைக்கலம் மகன் ஸ்டீபன்ராஜ் (30), அரசடி பனையூர் ராஜபாண்டி மகன் முத்துவேல் (37) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சுயம்புலிங்கமும் சின்னதுரையும் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி மற்றும் பழைய இரும்பு கடையில் வேலை பார்த்து வந்துள்ளனர். சுயம்புலிங்கம் பல்வேறு இடங்களில் நகைகளை திருடியுள்ளார். அந்த நகைகளை சின்னத்துரை மூலம் விற்பனை செய்துள்ளார். திருப்பூரில் உள்ள ஒரு வீட்டில் பெண்ணை கொலை செய்து சுயம்புலிங்கம் நகையை திருடியுள்ளார். இந்த வழக்கில் சின்னத்திரை முக்கியச் சாட்சியாக இருந்தார். அவர் சாட்சி சொன்னால் தனக்கு தண்டனை கிடைத்துவிடும் என சுயம்புலிங்கம் கருதியுள்ளார். இதனால் அவரை தீர்த்து கட்ட சுயம்புலிங்கம் முடிவு செய்ததாகவும், கூட்டாளிகளுடன் சேர்ந்து மது விருந்துக்கு அழைத்துச் சென்று சின்னத்துரையை கொலை செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
3 வாலிபர்கள் கைது
இதை தொடர்ந்து இந்த கொலை வழக்கில் மாரிகிருஷ்ணன், ஸ்டீபன்ராஜ், முத்துவேல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவிளையான சுயம்புலிங்கத்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.