தூத்துக்குடி அருகே 2 டாஸ்மாக் கடைகளில் ரூ.88 ஆயிரம் மதுபாட்டில்கள் திருட்டு


தினத்தந்தி 20 Oct 2022 12:15 AM IST (Updated: 20 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே 2 டாஸ்மாக் கடைகளில் ரூ.88 ஆயிரம் மதுபாட்டில்கள் திருடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே 2 டாஸ்மாக் கடைகளில் ரூ.88 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

டாஸ்மாக்

தூத்துக்குடி தாளமுத்துநகர் வடக்கு சோட்டையன் தோப்பு பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையை நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பூட்டிவிட்டு சென்றார்களாம். நேற்று காலையில் கடை சூப்பிரவைசர் அரிகிருஷ்ணன் என்பவர் கடையை திறக்க வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்ற பார்த்த போது, அங்கு இருந்த ரூ.31 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை மர்ம ஆசாமி திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுபாட்டில்கள் திருட்டு

இதே போன்று தருவைகுளம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கடையில் இருந்த ரூ.57 ஆயிரத்து 700 மதிப்பிலான மதுபாட்டில்களை மர்ம ஆசாமிகள் திருடி சென்று உள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் தருவைகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தருவைகுளம் உப்பளங்களில் மின்மோட்டாரில் இணைக்கப்பட்டு இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான காப்பர் ஒயர்களையும் மர்ம ஆசாமிகள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இது குறித்தும் தருவைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தொடர் திருட்டு சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story