தூத்துக்குடி அருகேநிலத்தடி நீரை உறிஞ்சி விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தூத்துக்குடி அருகே நிலத்தடி நீரை உறிஞ்சி விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அல்லிகுளம் கிராம மக்கள் காலிகுடங்களுடன் சென்று கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.
நிலத்தடி நீர் விற்பனை
தூத்துக்குடி அருகே உள்ள அல்லிக்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட முருகன் நகர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதிக்கு அல்லிக்குளம் பஞ்சாயத்து மூலம் வழங்கப்படும் தண்ணீர் கடந்த மூன்று மாதங்களாக வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் அல்லிகுளம் பகுதியில் சில தனியார் நிறுவனங்கள் ஆழ்துளை கிணறுகள் அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். ஆனாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
கோரிக்கை மனு
இதனால் கிராம மக்கள் நேற்று முன்தினம் நிலத்தடி நீரை ஏற்றி வந்த சில லாரிகளை பிடித்து புதுக்கோட்டை போலீசில் ஒப்படைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கிராம மக்கள் நேற்று காலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு காலி குடங்களுடன் வந்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், எங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் முறைகேடாக நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். எங்கள் பகுதிக்கு தினமும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.