தூத்துக்குடி அருகே மீன், இறால் அறுவடை திருவிழா


தூத்துக்குடி அருகே  மீன், இறால் அறுவடை திருவிழா
x
தினத்தந்தி 10 Nov 2022 12:15 AM IST (Updated: 10 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே மீன், இறால் அறுவடை திருவிழா நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே மீன்கள், இறால்கள் அறுவடை திருவிழா கொண்டாடப்பட்டது.

அறுவடை திருவிழா

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம்மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் இயங்கும் கடற்சார் உயிரின வளர்ப்பு ஆராய்ச்சி நிலையத்தில் "ஒருங்கிணைந்த பண்ணடுக்கு கடற்சார் நீருயிரி வளர்ப்பு" திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கூண்டுகளில் சிங்கி இறால்கள், வரி இறால்கள், பால் கெண்டை, கொடுவா மீன், பாறை மீன்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த மீன்கள் அறுவடை திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக துணை வேந்தர் கோ.சுகுமார் தலைமை தாங்கி பேசினார். மீன்வளக்கல்லூரி முதல்வர் அகிலன் வரவேற்று பேசினார். தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன் பேசினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் அறுவடை செய்யப்பட்ட மீன்கள், இறால்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டன. பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

மாற்று வாழ்வாதாரம்

விழாவில் துணை வேந்தர் சுகுமார் பேசும் போது, பண்ணடுக்கு உணவு சார்ந்த மீன் வளர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஒருங்கிணைந்த கடல்கூண்டுகளில் மீன்வளர்ப்பு மேற்கொள்ளுவதல் மீனவ சமுதாய மக்களுக்கு மாற்று வாழ்வாதரமாக அமையும். எதிர்கால கடல் மீன் தேவையை கடல் கூண்டுகள் மூலம் வளர்க்கப்படும் மீன்களே பூர்த்தி செய்யும் நிலை உண்டாகும் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். பேராசிரியர் சா.ஆதித்தன் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி பேராசிரியர் விஜய் அமிர்தராஜ் செய்து இருந்தார்.


Next Story