தூத்துக்குடி அருகே வக்கீல் கொலை வழக்கில்முக்கிய குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்


தினத்தந்தி 13 March 2023 12:15 AM IST (Updated: 13 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே வக்கீல் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே வக்கீல் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். இந்த சம்பவத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

வக்கீல் கொலை

தூத்துக்குடி சோரீஸ்புரத்தைச் சேர்ந்தவர் வக்கீல் முத்துக்குமார். இவர் கலெக்டர் அலுவலகம் அருகே அடகு கடையும் நடத்தி வந்தார்.

கடந்த மாதம் 22-ந் தேதி முத்துக்குமார் தனது அடகு கடை அருகே வந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஜாமீன் கிடைக்காமல் தடுத்தார்

அதில் கடந்த 2003-ம் ஆண்டு கோரம்பள்ளத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவரின் அண்ணன் ஆத்திப்பழம் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் வக்கீல் முத்துக்குமாரின் தம்பி சிவக்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் சிவக்குமார் கடந்த 2019-ம் ஆண்டு தூத்துக்குடி கோர்ட்டு அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ராஜேஷ் உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து ராஜேஷ் கோவை ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் கடந்த 3 ஆண்டுகளாக ஜாமீனில் வெளிவர முயற்சி செய்து வருகிறார். ஆனால் முத்துக்குமார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து ஜாமீன் கிடைக்காமல் தடுத்து வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேசின் ஆதரவாளர்கள், முத்துக்குமாரை கொலை செய்தது தெரியவந்தது.

முக்கிய குற்றவாளிக்கு வலைவீச்சு

இதுதொடர்பாக முக்கிய குற்றவாளியான ராஜேசின் அண்ணன் ஜெயப்பிரகாஷ் (வயது 35) உள்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த கொலை வழக்கு தொடர்பாக 5 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். 5 பேரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட சிலரை தனிப்படை போலீசார் வலைவீசி தீவிரமாக தேடி வந்தனர்.

சுற்றிவளைத்தனர்

இந்த நிலையில் தூத்துக்குடி அருகே உள்ள தட்டப்பாறை காட்டுப்பகுதியில் மறைவான இடத்தில் ஜெயப்பிரகாஷ் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு, போலீஸ்காரர் சுடலைமணி உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படையினர் நேற்று அதிகாலையில் காட்டுப்பகுதிக்கு சென்றனர். அங்கு பதுங்கி இருந்த ஜெயப்பிரகாசை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர்.

துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்

அப்போது, ஜெயப்பிரகாஷ் திடீரென்று தான் வைத்து இருந்த அரிவாளால் சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு, போலீஸ்காரர் சுடலைமணி ஆகியோரை வெட்டினார். இதில் அவர்களுக்கு இடது கைகளில் காயம் ஏற்பட்டது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தான் வைத்து இருந்த 9 எம்.எம். கைத்துப்பாக்கியால் ஜெயப்பிரகாசின் வலது முழங்காலுக்கு கீழே ஒரு முறை சுட்டு உள்ளார். இதில் அவரது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.

இதையடுத்து உடனடியாக போலீசார், ஜெயப்பிரகாசை மடக்கி பிடித்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே போன்று ஜெயப்பிரகாஷ் அரிவாளால் வெட்டியதில் காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு, போலீஸ்காரர் சுடலைமணி ஆகியோரும் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

டி.ஐ.ஜி. விரைந்தார்

இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து காயம் அடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் போலீசாரையும் நேரில் பார்த்து ஆறுதல் கூறினர்.

இதற்கிடையே ஜெயப்பிரகாசை புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்காக புகைப்படக்காரர்கள் உள்ளிட்டோர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அப்போது அங்கு தனி வார்டில் சிகிச்சை பெற்று வந்த ஜெயப்பிரகாஷ், அவர்களை நோக்கி சத்தம் போட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பரபரப்பு

கொலை வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story