தூத்துக்குடி அருகே நிலத்தை அளக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
தூத்துக்குடி அருகே நிலத்தை அளக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
தூத்துக்குடி அருகே நிலத்தை அளக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்..
சுடலைமாடசுவாமி கோவில்
தூத்துக்குடி-நெல்லை மெயின் ரோட்டோரத்தில் கோரம்பள்ளம் பகுதியில் சுடலைமாடன் சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் பகுதியில் உள்ள நிலத்தை தனியார் ஒருவர் அளப்பதற்காக கோர்ட்டு மூலம் உத்தரவு வாங்கி வந்தாராம். இதற்கு அந்த கோவிலில் வழிபட்டு வரும் பெரியநாயகிபுரம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோவில் முன்பு குவிந்து கோஷம் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து தாசில்தார் செல்வக்குமார், உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் ஆகியோர் அங்கு வந்தனர். தொடர்ந்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது கோர்ட்டு உத்தரவுப்படி நிலத்தை அளக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
தீக்குளிக்க முயற்சி
இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு இருந்த பிராட்டி என்ற பெண் திடீரென உடலில் மண்எண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கோர்ட்டு உத்தரவுப்படி நிலத்தை அளவீடு செய்தனர். அளவீடு செய்த விவரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளனர்.