தூத்துக்குடி அருகே சிப்காட் விரிவாக்கத்துக்கு இடம் தேர்வு குறித்து கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு
தூத்துக்குடி அருகே சிப்காட் விரிவாக்கத்துக்கு இடம் தேர்வு குறித்து கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு நடத்தினார்.
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மேலத்தட்டப்பாறை, கீழத்தட்டப்பாறை பகுதியில் உப்பாற்று ஓடை மற்றும் சில்லாநத்தம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட நயினார்புரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சிப்காட் விரிவாக்கத்துக்கு தேவையான இடங்களை தேர்வு செய்வது தொடர்பாக மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று காலை நேரில் ஆய்வு மேற்கொண்டார். சிப்காட் விரிவாக்கத்துக்கு தேவையான இடங்களில் எத்தனை பட்டாதாரர்கள் உள்ளனர், அரசு புறம்போக்கு நிலங்கள் எவ்வளவு உள்ளன என்பது குறித்து விரிவாக ஆய்வு நடத்தப்பட்டன.
முன்னதாக கீழத்தட்டப்பாறை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பள்ளிக்கு செல்ல பஸ்சுக்காக காத்திருந்த மேலத்தட்டப்பாறை பள்ளி மாணவர்களிடம் பஸ் வசதிகள் குறித்தும், பள்ளி வகுப்பு தொடங்கும் காலநேரம் குறித்தும் கலெக்டர் செந்தில்ராஜ் கேட்டறிந்தார். தொடர்ந்து சிறிது நேரம் மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார். அதன்பிறகு அருகில் உள்ள அரசு பள்ளிக்கூடத்துக்கு சென்று காலை உணவு வழங்கியது குறித்து ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும் கேட்டறிந்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு உதவி கலெக்டர் (சிப்காட்) லதா, சிறப்பு தாசில்தார் (நிலம்) பிரபாகரன், தாசில்தார்கள் சிவக்குமார், அமுதா மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.