தூத்துக்குடி அருகே பள்ளி மாணவர்கள் சாலை மறியல்


தூத்துக்குடி அருகே  பள்ளி மாணவர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 9 Nov 2022 12:15 AM IST (Updated: 9 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நிற்காமல் செல்வதை கண்டித்து செவ்வாய்க்கிழமை பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நிற்காமல் செல்வதை கண்டித்து செவ்வாய்க்கிழமை பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பஸ்கள் நிற்பதில்லை

தூத்துக்குடி அருகே உள்ள அந்தோணியார்புரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் தூத்துக்குடி மாநகரில் உள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் பஸ்சில் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்தநிலையில் பெரும்பாலான பஸ்கள் அந்தோணியார்புரத்தில் நிற்காமல் சென்று வருவதாக கூறப்படுகிறது. நேற்று காலையில் வழக்கம் போல் மாணவ, மாணவிகள் பள்ளிக்கூடத்துக்கு செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் காத்து நின்றனர். ஆனால் பஸ் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.

சாலைமறியல்

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவ, மாணவிகள் பாளையங்கோட்டை ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து பஸ் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதன்பேரில் மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story