தூத்துக்குடி அருகேஉப்பள தொழிலாளியை அரிவாள் வெட்டிய3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
தூத்துக்குடி அருகே உப்பள தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு: 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி அருகே உள்ள முடுக்குகாடு கிழக்கு தெருவை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகன் அபிமன்னன் (வயது 42) உப்பள தொழிலாளி. இவரது நண்பரான நாகராஜ் என்பவரை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முத்தையாபுரம் வடக்கு தெருவை சேர்ந்த முனியசாமி மகன் அஜித் அவதூறாக பேசி, அவரிடம் தகராறு செய்துள்ளார்.
அப்போது அங்கு வந்த அபிமன்னன் இருவரையும் சத்தம் போட்டு கண்டித்து அனுப்பி உள்ளார். இதனால் அபிமன்னனுக்கும், அஜித்துக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று மது குடிக்க அபிமன்னனை அஜித் அழைத்துள்ளார். மது குடிக்க ஆசைப்பட்டு முடுக்குகாடு விலக்கிற்கு எதிரில் உள்ள உப்பள பகுதிக்கு அபிமன்னனும் சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த அஜித் மற்றும் முத்தையாபுரம் வடக்கு தெருவை சேர்ந்த பாண்டி மகன் தர்மராஜ் உள்ளிட்ட 3 பேர் சேர்ந்து நாகராஜூவுக்கு ஆதரவாக செயல்படுவது ஏன்? எனக்கூறி தகராறு செய்து அரிவாளால் வெட்டியதுடன், கத்தியால் அபிமன்னனை குத்தியுள்ளனர். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை பார்த்த அஜித் உள்ளிட்ட 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.
பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த அபிமன்னனை அக்கம் பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித் உள்ளிட்ட 3 பேரையும் தேடிவருகின்றனர்.