தூத்துக்குடி அருகேதந்தை, மகனுக்கு அரிவாள்வெட்டு
தூத்துக்குடி அருகே தந்தை, மகனுக்கு அரிவாள்வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்பிக் நகர்:
தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு நேசமணி நகரை சேர்ந்தவர் தங்கவேல் இவரது மகன் சக்திவேல் (வயது39). இவர் வளர்த்து வந்த பன்றிகளை தேவி நகரைச் சேர்ந்த நைனார் மகன் புஷ்பராஜ் (38) என்பவர் திருடி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சக்திவேல் வீட்டில் இருந்த பன்றி வலைகளை புஷ்பராஜ் எடுத்து சென்று விட்டாராம். இது குறித்து புஷ்பராஜ் வீட்டுக்கு சென்ற சக்திவேலும் அவரது தந்தை தங்கவேலுவும் அவரிடம் ஏன் பன்றிவளைகளை எடுத்துச் சென்றாய் என்று கேட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த புஷ்பராஜ்,அவர்களை அவதூறாக பேசி, வீட்டில் இருந்த அரிவாளால் சக்திவேலை வெட்டியுள்ளார். இதனை தடுக்க வந்த தங்கவேலுவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. மேலும் சக்திவேலின் புதிய மோட்டார் சைக்கிளையும் புஷ்பராஜ் அரிவாளால் வெட்டி சேதப்படுத்தி, அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். காயமடைந்த புஷ்பராஜூவும், தங்கவேலுவும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இது குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து புஷ்பராஜை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட புஷ்பராஜ் மீது முத்தையாபுரம் போலீசில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.