தூத்துக்குடி அருகே மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன்


தினத்தந்தி 12 July 2022 4:24 PM IST (Updated: 12 July 2022 6:00 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன் உள்பட 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே உள்ள செட்டிமல்லன்பட்டி உச்சிமகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். இவருடைய மனைவி கற்பகவள்ளி (வயது 28). இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து உள்ளது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கற்பகவள்ளியின் நடத்தையில் சந்தேகப்பட்ட வேல்முருகனுக்கும், கற்பகவள்ளிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர்கள் சுமார் 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று காலையில் வேல்முருகன் வீட்டுக்கு சென்றாராம். அப்போது கணவன், மனைவி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த வேல்முருகன் வெளியில் சென்றுவிட்டாராம். பின்னர் தனது நண்பரான ஸ்ரீவைகுண்டம் புதுப்பட்டியை சேர்ந்த பண்டாரம் மகன் பிரேம்குமார் (21) என்பவரை அழைத்துக் கொண்டு மீண்டும் வீட்டுக்கு சென்று உள்ளார். அங்கு இருந்த கற்பகவள்ளியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து உள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, கற்பவகவள்ளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் கொலை வழக்கில் ஈடுபட்ட வேல்முருகன், பிரேம்குமார் ஆகிய 2 பேரும் ஸ்ரீவைகுண்டம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து புதுக்கோட்டை போலீசார் கொலையாளிகளை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story