உளுந்தூர்பேட்டை அருகே கார் மோதி 2 மேஸ்திரிகள் பலி
உளுந்தூர்பேட்டை அருகே கார் மோதியதில் 2 மேஸ்திரிகள் உயிரிழந்தனர்.
உளுந்தூர்பேட்டை,
வேலூர் மாவட்டம் காட்பாடி அரிக்கை மேடு பகுதியை சேர்ந்தவர்கள் மாரி மகன் சந்தோஷ்குமார்(வயது 28), கோபால் மகன் ஆனந்த்(30). கட்டிட மேஸ்திரிகளான இவர்கள் இருவரும் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மடப்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் ஒன்றில் ஹாலோ பிளாக் கற்கள் பதிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் மதியம் சந்தோஷ் மற்றும் ஆனந்த் இருவரும் பெட்ரோல் பங்க் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் ஒன்று, இவர்கள் மீது மோதியது.
போலீசார் விசாரணை
இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான சந்தோஷ்குமார், ஆனந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.