உளுந்தூர்பேட்டை அருகேஇரு தரப்பினர் இடையே மோதல்; 2 பேருக்கு கத்திக்குத்துஊராட்சி மன்ற தலைவர் உள்பட 40 பேர் மீது வழக்கு


உளுந்தூர்பேட்டை அருகேஇரு தரப்பினர் இடையே மோதல்; 2 பேருக்கு கத்திக்குத்துஊராட்சி மன்ற தலைவர் உள்பட 40 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 29 Dec 2022 7:00 PM GMT (Updated: 29 Dec 2022 7:00 PM GMT)

உளுந்தூர்பேட்டை அருகே இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 40 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த ஆர்.ஆர்.குப்பம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்களுக்கும், ஒலையனூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர்களுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று இரு கிராமத்தை சேர்ந்த முக்கியஸ்தர்கள், இளைஞர்களை அழைத்து சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், ஒருவரையொருவர், ஆயுதங்களால் தாக்கிக்கொண்டனர். இதில் ஒலையனூர் கிராமத்தை சேர்ந்த 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. மேலும் 2 கிராமங்களை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சாலை மறியல்

இதற்கிடையே இதுபற்றி அறிந்த ஒலையனூர் கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர், உளுந்தூர்பேட்டை-சேலம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷம் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசாா் தெரிவித்தனர். இதையேற்ற அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

40 பேர் மீது வழக்கு

இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் தனித்தனியாக உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனார். அதன்பேரில் ஆர்.ஆர்.குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் தங்க ரமேஷ் மற்றும் அவரது ஆதரவாளர் பாலி கிராமத்தை சேர்ந்த சங்கர் உள்பட 8 பேர் மீதும், ஒலையனூர் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி, ஸ்டாலின் உள்பட 32 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க இரு கிராமங்களிலும் போலீஸ் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story