உளுந்தூர்பேட்டை அருகேமனைவி தலையில் குழவி கல்லை போட்டு கொலைதொழிலாளி வெறிச்செயல்
உளுந்தூர்பேட்டை அருகே மனைவி தலையில் குழவி கல்லை போட்டு கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
எலவனாசூர்கோட்டை,
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூா்கோட்டை நம்பிகுளம் தெருவை சேர்ந்தவர் பச்சமுத்து(வயது 35). இவருடைய மனைவி செண்பகம்(32). இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர்.
கணவன்-மனைவி இருவரும், தங்களது குழந்தைகளை வீட்டில் விட்டு, விட்டு சென்னை, கேரளா போன்ற பகுதிகளுக்கு சென்று கூலி வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையையொட்டி பச்சமுத்துவும், செண்பகமும் சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.
குழவி கல்லை போட்டு கொலை
கடந்த சில தினங்களாக கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு கடும் வாக்குவாதம் நடைபெற்றது.
பின்னர் செண்பகம், தூங்க சென்றுவிட்டார். இருப்பினும் ஆத்திரம் தீராத பச்சமுத்து, தனது மனைவியை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி வீட்டில் கிடந்த குழவி கல்லை எடுத்து மனைவி என்றும் பாராமல் செண்பகத்தின் தலையில் போட்டதாக தெரிகிறது. இதில் செண்பகம் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையே இந்த சத்தம் கேட்டு 4 குழந்தைகளும் திடுக்கிட்டு எழுந்தனர். அப்போது அங்கு தாய் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள், பச்சமுத்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொழிலாளி கைது
அதன்பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து செண்பகத்தின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தலைமறைவான பச்சமுத்துவை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் கேரளாவுக்கு தப்ப முயன்ற பச்சமுத்துவை வாழவந்தான்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவியின் தலையில் கணவனே குழவி கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.