உத்தமபாளையம் அருகே வாய்க்காலில் கிடந்த சாக்குமூட்டையால் பரபரப்பு


உத்தமபாளையம் அருகே  வாய்க்காலில் கிடந்த சாக்குமூட்டையால் பரபரப்பு
x

உத்தமபாளையம் அருகே வாய்க்காலில் கிடந்த சாக்குமூட்டையால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி

சாக்குமூட்டை

உத்தமபாளையம் அடுத்துள்ள அனுமந்தன்பட்டி புதிய பைபாஸ் சாலை ரவுண்டானா பகுதியில் வாய்க்கால் பாலம் உள்ளது. இதன் அருகே ரத்தக்கறையுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று கவிழ்ந்து கிடந்தது. இந்த நிலையில் வாய்க்கால் தண்ணீரில் கட்டிய நிலையில் சாக்கு மூட்டை ஒன்று கிடந்தது.

இதற்கிடையே யாரோ ஒருவரை கொலை செய்து பிணத்தை சாக்கு மூட்டையில் கட்டி மர்ம நபர்கள் வாய்க்காலில் வீசி சென்றதாக தகவல் பரவியது. இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் ஏராளமானோர் கூடினர். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீஸ் விசாரணை

அதன்பேரில் உத்தமபாளையம் இன்ஸ்பெக்டர் சிலைமணி மற்றும் உத்தமபாளையம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அங்கு கூடியிருந்த பொதுமக்களை கலைந்து போக செய்தனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் வாய்க்காலில் இறங்கி சாக்கு மூட்டையை வெளியே தூக்கி வந்தனர். பின்னர் சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தபோது அதில் மருத்துவக் கழிவுகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து மருத்துவக்கழிவுகளை அந்த இடத்தில் வீசி சென்ற மர்ம நபர்கள் குறித்தும், அங்கு கிடந்த மோட்டார்சைக்கிள் யாருடையது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அந்த மோட்டார்சைக்கிள் நேற்று முன்தினம் நள்ளிரவு உத்தமபாளையம் அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்ற மர்மநபர்கள் விட்டு சென்றது என்பது தெரிந்தது. மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். வாய்க்காலில் கிடந்த சாக்குமூட்டையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story