உத்தமபாளையம் அருகே விளையாட்டு மைதானம் அமைக்க இடம் தேர்வு: கலெக்டர் ஆய்வு
உத்தமபாளையம் அருகே விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு தொகுதிகள் வாரியாக ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் அமைக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கம்பம் தொகுதிக்கு, உத்தமபாளையத்தை அடுத்த கோம்பை சிக்கச்சியம்மன் கோவில் அருகே புதிய விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த இடத்தை நேற்று கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார். அப்போது கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ., உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. பால்பாண்டியன், தாசில்தார் சந்திரசேகர், துணை தாசில்தார் ஜாகிர் உசேன் மற்றும் வருவாய் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானத்தில் அனைத்து விளையாட்டுகளுக்கான மைதானம் மற்றும் நடைப்பயிற்சிக்கு என்று தனி பூங்காஅமைக்கப்பட உள்ளது. கிராம இளைஞர்கள் ராணுவம் மற்றும் போலீஸ் உள்ளிட்ட அரசு பணிகளுக்கு தங்களை தயார் படுத்திக் கொள்வதற்காக உடற்பயிற்சி கூடத்துடன் நவீன முறையில் விளையாட்டு மைதானம் அமைய உள்ளது என்றார்.