உத்தமபாளையம் அருகே சண்முகா நதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பது எப்போது? விவசாயிகள் எதிர்பார்ப்பு
உத்தமபாளையம் அருகே சண்முகா நதி அணையில் இருந்து எப்போது தண்ணீர் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டியில் சண்முகா நதி அணை உள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் 52.5 அடியாக உள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான மேகமலை, மேல்மணலாறு, கீழ்மணலாறு, இரவங்கலாறு உள்ளிட்ட மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் மொத்த கொள்ளளவான 52.55 அடியை எட்டி தண்ணீர் மறுகால் பாய்கிறது.
இந்த அணையின் மூலம் ராயப்பன்பட்டி, ஆணைமலையன்பட்டி, எரசக்கநாயக்கனூர், கன்னிசேர்வைபட்டி, அப்பிபட்டி, வெள்ளையம்மாள்புரம், ஓடைப்பட்டி உள்ளிட்ட பகுதியில் உள்ள 25-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பி அந்தப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயருகிறது. எனவே சண்முகா நதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்றும், தண்ணீர் திறக்கும் முன்பு புதர்மண்டி கிடக்கும் சண்முகா நதி வாய்க்கால்களை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, சண்முகா நதி அணை நிரம்பி கடந்த 10 நாட்களுக்கு மேலாக மறுகால் பாய்ந்து வருகிறது. எனவே அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும். மேலும் இதுகுறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளோம் என்றனர்.