வானூர் அருகேபழைய காரை விற்பனை செய்வதாக டிரைவரிடம் ரூ.1½ லட்சம் மோசடிமர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
வானூர் அருகே பழைய காரை விற்பனை செய்வதாக டிரைவரிடம் ரூ.1½ லட்சம் மோசடி மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பெரியமுதலியார்சாவடி பகுதியைச்சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 35), கார் டிரைவர். இவர் கடந்த சில மாதத்திற்கு முன்பு தனது முகநூலை பயன்படுத்திக்கொண்டிருந்தார்.
அப்போது கார் விற்பனைக்கு என்று வந்த விளம்பரத்தை பார்த்து காரை வாங்குவதற்காக அதில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணை வாட்ஸ்-அப் மூலம் தொடர்புகொண்டு பேசினார். அப்போது எதிர்முனையில் பேசிய நபர், தான் இந்திய ராணுவத்தில் பணிபுரிவதாக கூறி ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் அனுப்பினால் காரை ராணுவ பார்சல் சர்வீஸ் மூலம் அனுப்பி வைப்பதாக கூறியுள்ளார்.
மோசடி
இதை நம்பிய ரவிச்சந்திரன், அந்த நபர் கூறிய வங்கியின் கணக்கிற்கு 12 தவணைகளாக கூகுள்பே, போன்பே மூலமாக ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்தை அனுப்பினார். ஆனால் பணத்தைப்பெற்ற அந்த நபர், ரவிச்சந்திரனுக்கு காரை அனுப்பி வைக்காமல் மேலும் பணம் கட்ட சொல்லி ஏமாற்றி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரவிச்சந்திரன், விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.