வருசநாடு அருகே, விஷம் கொடுத்துநாய்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை


வருசநாடு அருகே, விஷம் கொடுத்துநாய்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 30 April 2023 12:15 AM IST (Updated: 30 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வருசநாடு அருகே விஷம் கொடுத்து நாய்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

தேனி

நாய்கள் சாவு

வருசநாடு அருகே கோரையூர் கிராமம் உள்ளது. வனப்பகுதியையொட்டி இந்த கிராமம் அமைந்துள்ளதால் பாதுகாப்பிற்காக சிலர் நாய்களை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 5-ந்தேதி அந்த கிராமத்தில் 7 பேர் வளர்த்து வந்த 11 நாய்கள் இறந்து கிடந்தன.

இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேனி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், மேகமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட மஞ்சனூத்து சோதனை சாவடியில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் கோழி இறைச்சியில் விஷத்தை கலந்து நாய்களை கொன்றதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அதிகாரி மீது மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்திலும் புகார் கொடுத்தனர்.

அதிகாரிகள் விசாரணை

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நேற்று வனத்துறை சிறப்பு பாதுகாப்புகுழு வனச்சரகர் சாந்தினி தலைமையில் வனத்துறையினர் மேகமலை வனச்சரக அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் வனக்காவலர் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார்.

இதையடுத்து விசாரணை தொடர்பான அறிக்கை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வனச்சரகர் தெரிவித்தார்.


Next Story