வருசநாடு அருகேமூலவைகை ஆற்றில் கலக்கும் கழிவுநீர்
வருசநாடு அருகே மூலவைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.
வருசநாடு அருகே உள்ள வெள்ளிமலை வனப்பகுதியில் மூல வைகை ஆறு உற்பத்தியாகிறது. கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் ஆதாரமாக இந்த ஆறு விளங்குகிறது. மேலும் மூலவைகை ஆறு தண்ணீர் மூலம் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் தென்னை, முருங்கை உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு, தங்கம்மாள்புரம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், மூலவைகை ஆற்றில் கலந்து வருகிறது. இதனால் ஆற்று நீர் மாசடைந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத இறுதியில் இருந்து ஆகஸ்டு மாதம் வரை மூல வைகை ஆறு வறண்ட நிலையில் காணப்படும். அப்போது கிராமங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆற்றில் குளம் போல தேங்கி காணப்படும்.
பின்னர் மழை பெய்து நீர் வரத்து ஏற்படும் போது அதனுடன் கழிவு நீரும் சேர்ந்து உறை கிணறுகளுக்குள் சென்று குடிநீரை மாசுபடுத்துகிறது. இதனால் மூல வைகை ஆற்றில் நீர்வரத்து தொடங்கும் முதல் 2 வாரங்கள் கழிவுநீர் கலந்த குடிநீரை குடிப்பதால் பொதுமக்களுக்கு டைபாய்டு காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் நல குறைவு ஏற்படுகிறது. எனவே மூல வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்கும் வகையில் அனைத்து கிராமங்களிலும் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.