வருசநாடு அருகேவாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
வருசநாடு அருகே வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
வருசநாடு அருகே உள்ள காந்திபுரத்தை சேர்ந்தவர் சொக்கர் (வயது 35). கடந்த மாதம் முன்விரோதம் காரணமாக இவர், அதே கிராமத்தை சேர்ந்த சமுத்திரம் (53) என்பவரை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இதையடுத்து வருசநாடு போலீசார் சொக்கரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இவர், ஏற்கனவே கொலை வழக்கில் கைதாகி 12 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வெளியே வந்தவர். சிறையில் இருந்து விடுதலையான சில ஆண்டுகளிலேயே அவர் மீண்டும் கொலை சம்பவத்தில் ஈடுபட்டதால் சொக்கர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
அதன்பேரில், சொக்கரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை ஏற்ற கலெக்டர் ஷஜீவனா, சொக்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி உத்தரவிட்டார். இதையடுத்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு மதுரை மத்திய சிறை அதிகாரியிடம் வழங்கப்பட்டது.