விளாத்திகுளம் அருகே சந்தனக்கூடு திருவிழா


விளாத்திகுளம் அருகே  சந்தனக்கூடு திருவிழா
x
தினத்தந்தி 12 Oct 2022 12:15 AM IST (Updated: 12 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் அருகே சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே சந்தனக்கூடு திருவிழா விமரிசையாக நடந்தது. இவ்விழாவில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு மலர்கள் வழங்கி வழிபட்டனர்.

சந்தனக்கூடு திருவிழா

விளாத்திகுளம் அருகே உள்ள வைப்பார் கிராமத்தில் உள்ள மகான் செய்யது சமசுதீன் ஷஹீது வலியுல்லாஹ் தர்காவில், சந்தனக்கூடு திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு திருவிழா நேற்று மாலை முதல் தொடங்கி விமரிசையாக நடைபெற்றது.

இதை முன்னிட்டு நேற்று வாத்தியம் மேளங்கள் முழங்க வாண வேடிக்கைகளுடன் எடுத்து வரப்பட்ட சந்தனக்கூடு பாரம்பரிய முறைப்படி கிராமத்தில் உள்ள இஸ்லாமிய இளைஞா்கள், பெரியவா்கள் ஒன்றுகூடி பாட்டுபாடி களிகம்பு ஆட்டம் ஆடி ஊா்வலமாக சென்றனா். பின்னர் சந்தனம், மகானின் சமாதியில் பூசப்பட்டது. அங்கு உலக நன்மைக்காக சிறப்புத் தொழுகை நடந்தது. இந்த விழாவில் வைப்பாறு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு மலா்கள் வழங்கி வழிபட்டனா்.

மதநல்லிணக்கவிழா

விழா நாட்களில் ஊர்வலமாக எடுத்து வரப்படும் சந்தனக்கூட்டின் ஒவ்வொரு பகுதியையும், ஒவ்வொரு சமூகத்தினரும் செய்து அலங்கரித்து எடுத்து வருவதால், அனைத்து மதத்தினரும் கொண்டாடும் மத நல்லிணக்க விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. முதலில் பெரிய மாட்டு வண்டி, சிறிய மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இப்பந்தயத்தில் 31 மாட்டுவண்டிகள் பங்கேற்றன. இந்த போட்டியை சுற்றுவட்டார கிராமமக்கள் திரண்டிருந்து கண்டுகளித்தனர்.


Next Story