விளாத்திகுளம் அருகேலாரி கவிழ்ந்து விபத்து
விளாத்திகுளம் அருகே லாரி கவிழ்ந்து விபத்தில் இரண்டு பேர் காயம் அடைந்துள்ளனர்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள குறளையம்பட்டி பகுதியில் இருந்து ஊசிமேசியாபுரம் கிராமத்திற்கு தனியார் நிறுவன கட்டுமான பணிக்காக ஜல்லி மற்றும் சிமெண்டு கலவையை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றது. லாரியை மேல ஈரால் சதீஷ்குமார் (வயது 32) என்பவர் ஓட்டிச்சென்றார். விளாத்திகுளம் அருகே உள்ள அய்யனார்புரம் சாலை வளைவில் திரும்பும் போது நிலைதடுமாறி லாரி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சதீஷ்குமார், கிளீனர் மகாராஜன் ஆகியோர் லாரியின் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டு வெளியே வர முடியாமல் கூச்சல் போட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் இருவரையும் லாரியில் இருந்து பத்திரமாக மீட்டனர். அவர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர். சம்பவ இடத்துக்கு வந்த விளாத்திகுளம் தீயணைப்பு துறை வீரர்கள் லாரியில் தீப்பற்றி விடாமல் தண்ணீரை பீய்ச்சி அடித்து தடுப்பு நடவடிக்கை எடுத்தனர். இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.