விளாத்திகுளம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
விளாத்திகுளம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் பேரூராட்சியில் ஒப்பந்ததாரராக இருப்பவர் குமார். அவருக்கு உதவியாளராக புதூர் கண்ணப்பர் தெருவை சேர்ந்த பால்ராஜ் மகன் கார்த்திக் (வயது 24) என்பவர் இருந்து வந்தார். நேற்று மாலையில் பேரூராட்சி குப்பை கிடங்கில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, கட்டிடத்தில் மேலிருந்த விளக்கை மாற்றுவதற்கு அலுமினிய ஏணியை தூக்கிய போது எதிர்பாராத விதமாக மின்ஒயரில் உரசியது. இதில் ஏணியில் பாய்ந்த மின்சாரம் தாக்கி அவர் கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து தகவல் அறிந்த புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா மற்றும் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.