விருத்தாசலம் அருகே இடுப்பளவு தண்ணீாில் ஆற்றை கடந்து பள்ளிக்கு செல்லும் மாணவா்கள் மணிமுக்தாற்றின் குறுக்கே பாலம் கட்டப்படுமா?


விருத்தாசலம் அருகே  இடுப்பளவு தண்ணீாில் ஆற்றை கடந்து பள்ளிக்கு செல்லும் மாணவா்கள்  மணிமுக்தாற்றின் குறுக்கே பாலம் கட்டப்படுமா?
x

விருத்தாசலம் அருகே இடுப்பளவு தண்ணீாில் ஆற்றை கடந்து மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கு சென்று வருகிறார்கள்.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் அருகே உள்ள மே.மாத்தூர் கிராமத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராம மக்கள் மணிமுக்தாற்றை கடந்துதான் பள்ளி, கல்லூரிகளுக்கும், விருத்தாசலம், வேப்பூர் உள்ளிட்ட ஊர்களுக்கும் சென்று வரமுடியும். சமீபத்தில் பெய்த கனமழையால் அணைக்கட்டு நிரம்பி வழிகிறது. மேலும் ஆற்றில் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றை கடந்து செல்ல பால வசதி இ்ல்லாததால் மே.மாத்தூர் கிராம மக்கள், மற்றொரு வழியான இலங்கியனூர் பாலம் வழியாக 5 கிலோ மீட்டர் சுற்றி சென்று வந்தனர்.

ஆபத்தை உணராத மாணவர்கள்

கடந்த சில நாட்களாக மழை பெய்யாததால், ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. இருப்பினும் தற்போது இடுப்பளவு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. மே.மாத்தூரில் உள்ள மாணவர்கள் நல்லூர், விருத்தாசலம், வேப்பூர் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் தான் படித்து வருகின்றனர். இதனால் மாணவ-மாணவிகள் ஆபத்தை உணராமல் ஆற்றில் இறங்கி பள்ளி, கல்லூரிக்கு சென்று வருகின்றனர். மேலும் பெற்றோர், தங்களது குழந்தைகளை தோள்களில் சுமந்தபடி ஆற்றை கடப்பதையும் காண முடிகிறது.

ஆற்றை கடக்கும்போது சீருடை முழுவதும் தண்ணீரில் நனைந்து விடுவதால், மாணவ-மாணவிகள் வகுப்பறையில் இருக்கும் போது குளிரில் நடுங்குகின்றனர். இதனால் அவர்களது உடல்நலன் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

பாலம் கட்ட வேண்டும்

சிலர் முன்னெச்சரிக்கையாக வீடுகளில் இருந்தே மாற்று உடையில் வந்து, ஆற்றை கடந்ததும் சீருடையை மாற்றிக் கொள்வதையும் காண முடிகிறது. எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண மே.மாத்தூரில் மணிமுக்தாற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story