ஏற்காடு அருகே, பஸ் வசதி வேண்டும் என்பதற்காக சொந்த பணத்தில் சாலை அமைத்த கிராம மக்கள்


ஏற்காடு அருகே, பஸ் வசதி வேண்டும் என்பதற்காக சொந்த பணத்தில் சாலை அமைத்த கிராம மக்கள்
x

ஏற்காடு அருகே பஸ் வசதி வேண்டும் என்பதற்காக கிராம மக்கள் தாங்களே பணம் சேகரித்து சாலை அமைத்த சம்பவம் நடந்துள்ளது. இனியாவது அந்த கிராமத்திற்கு பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேலம்

ஏற்காடு:

சாலை வசதி

ஏற்காட்டில் இருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செம்மநத்தம் ஊராட்சி செங்கலத்துப்பாடி கிராமத்தில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு கொரோனா தொடங்கிய காலக்கட்டம் வரை பஸ்கள் இயக்கப்பட்டன. ஊரடங்கு காலத்திலும், அதன் பிறகும் இந்த கிராமத்திற்கு இதுவரை பஸ்கள் இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இது தொடர்பாக பல முறை தாசில்தார் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோரிடம் கோரிக்கை மனு வழங்கியும் இதுவரை செங்கலத்துப்பாடி கிராமத்திற்கு பஸ் இயக்கப்படவில்லை. இது குறித்து அதிகாரிகளை சந்தித்து கிராம மக்கள் பேசிய போது, செங்கலத்துப்பாடி கிராமத்திற்கு சரிவர சாலைகள் இல்லாத காரணத்தால் தான் பஸ்கள் எதுவும் இயக்கப்படுவது இல்லை என தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து பலமுறை தாசில்தார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் பலமுறை மனு வழங்கியும் எந்த பயனும் இல்லாததால் உடனடியாக ஊர் மக்கள் ஒன்று கூடி தங்களது குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பதால் சாலையை தாங்களே அமைத்து கொள்ள முடிவு செய்தனர்.

பணம் சேகரித்து சாலை அமைத்த மக்கள்

இதையடுத்து கிராம மக்கள் அனைவரும் சிறு தொகையை சேகரித்து தங்களது கிராமத்திற்கான சாலையை தாங்களாகவே முன் வந்து அமைத்து வருகின்றனர்.

இது குறித்து அந்த கிராம மக்கள் கூறும் போது, 'சுமார் 3 கிலோமீட்டர் தார் சாலை சிறிது சேதமடைந்ததால் பஸ்சை இயக்க மாட்டோம் என அதிகாரிகள் தெரிவித்தது எங்களுக்கு வேதனை அளிக்கிறது. அரசு சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாத பட்சத்தில் தாங்களே சாலை அமைத்து வருகிறோம். இனியாவது எங்களது குழந்தைகள் பள்ளிக்கு செல்ல பஸ்களை எங்கள் கிராமத்திற்கு இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்கள்.

கிராம மக்களின் நியாயமான இந்த கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து செங்கலத்துப்பாடி கிராமத்திற்கு பஸ் இயக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாகும்.


Next Story