15 பள்ளிகளில் 'நீட்' தேர்வு பயிற்சி வகுப்பு


15 பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி வகுப்பு
x
திருப்பூர்


திருப்பூர் மாவட்டத்தில் 15 பள்ளிகளில் 'நீட்' தேர்வு பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கியது. மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

15 பள்ளிகளில் பயிற்சி

திருப்பூர் மாவட்டத்தில் 2022-23-ம் கல்வியாண்டில் 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் அரசு, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு 'நீட்' உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நேற்று தொடங்கியது. இதற்காக 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 15 பள்ளிகளில் வகுப்புகள் நடந்தன.

அதன்படி திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கே.எஸ்.சி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, அவினாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளி, வெள்ளகோவில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி, தாராபுரம் என்.சி.பி. நகரவை மேல்நிலைப்பள்ளி, மூலனூர் அரசு மேல்நிலைப்பள்ளி, குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளி, பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பொங்கலூர் பி.வி.கே.என்.மேல்நிலைப்பள்ளி, உடுமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 'நீட்' பயிற்சி வகுப்பு நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

பயிற்சி வகுப்பு தொடங்கியது

ஒவ்வொரு பள்ளியிலும் 11-ம் வகுப்பில் 20 பேரும், 12-ம் வகுப்பில் 50 பேரும் இந்த பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டு இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்றனர். திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கே.எஸ்.சி. மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி வகுப்பில் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் வந்து முழு அளவில் பங்கேற்றனர். பயிற்சி வகுப்பை திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திருவளர்செல்வி ஆய்வு செய்தார்.

'நீட்' பயிற்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் உடனிருந்தார். காலை இயற்பியல், தாவரவியல் பாடங்களும், மதியம் வேதியியல், விலங்கியல் பாடங்களும் திறமை வாய்ந்த ஆசிரியர்கள் மூலமாக பயிற்சி அளிக்கப்பட்டது. மாலை 4.30 மணி வரை வகுப்பு நடைபெற்றது. தொடர்பு தலைமை ஆசிரியர்கள், தொடர்பு ஒருங்கிணைப்பாளர்கள், போட்டித்தேர்வு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாணவர்கள் அதிகம் இருந்தால் கூடுதல் பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தனர்.


Next Story