'நீட்' தேர்வு முடிவு வெளியீடு தமிழக மாணவர் பிரபஞ்சன் அகில இந்திய அளவில் முதலிடம்
நாடு முழுவதும் 20 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வு முடிவு நேற்று இரவு வெளியானது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் அகில இந்திய அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளார்.
சென்னை,
நாடு முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி ஆகியவற்றில் இளநிலை படிப்புகளுக்கும், கால்நடை மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இளநிலை படிப்புகளுக்கும், ராணுவ நர்சிங் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கும் 'நீட்' நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
அவ்வாறு தேர்ச்சி பெறும் மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் மேற்சொன்ன மருத்துவம் சார்ந்த படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2023-24-ம் கல்வியாண்டு மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வை எழுத நாடு முழுவதும் 11 லட்சத்து 84 ஆயிரத்து 502 மாணவிகள், 9 லட்சத்து 2 ஆயிரத்து 930 மாணவிகள், 13 திருநங்கைகள் என மொத்தம் 20 லட்சத்து 87 ஆயிரத்து 445 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
499 நகரங்களில் நடந்தது
தமிழ்நாட்டை பொறுத்தவரையில், 1 லட்சத்து 47 ஆயிரத்து 583 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான நுழைவுத் தேர்வு கடந்த மாதம் (மே) 7-ந்தேதி நாடு முழுவதும் 499 நகரங்களில் கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்து முடிந்தது.
இந்த தேர்வை விண்ணப்பித்தவர்களில் ஏராளமானோர் எழுதினார்கள். தேர்வு நடந்து முடிந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், தேர்வு முடிவு எப்போது வெளியாகும்? என்ற எதிர்பார்ப்பில் மருத்துவப் படிப்பு கனவோடு மாணவர்கள் பலரும், அவர்களின் பெற்றோரும் காத்திருந்தனர்.
56.21 சதவீதம் பேர் தேர்ச்சி
இந்த நிலையில் நீட் நுழைவுக்கான தேர்வு முடிவை, தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நேற்று இரவு வெளியிட்டு இருக்கிறது. தேர்வு எழுத விண்ணப்பித்த 20 லட்சத்து 87 ஆயிரத்து 445 பேரில், 20 லட்சத்து 38 ஆயிரத்து 596 மாணவ-மாணவிகள் நீட் தேர்வை எழுதினார்கள். இவர்களில் 6 லட்சத்து 55 ஆயிரத்து 599 மாணவிகள், 4 லட்சத்து 90 ஆயிரத்து 374 மாணவர்கள், 3 திருநங்கைகள் என மொத்தம் 11 லட்சத்து 45 ஆயிரத்து 976 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் தேர்ச்சி சதவீதம் 56.21 ஆகும்.
கடந்த ஆண்டு 17 லட்சத்து 64 ஆயிரத்து 571 மாணவ-மாணவிகள் நீட் தேர்வை எழுதியதில், 9 லட்சத்து 93 ஆயிரத்து 69 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 56.27 ஆகும். இதன்படி பார்க்கையில், தேர்ச்சி சதவீதம் சற்று குறைந்து இருப்பது தெரிய வருகிறது.
தமிழகத்தில் 78 ஆயிரம் பேர் தேர்ச்சி
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 583 பேர் விண்ணப்பித்ததில், ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 516 பேர் தேர்வை எழுதியிருந்தார்கள். அவர்களில் 78 ஆயிரத்து 693 மாணவ-மாணவிகள் வெற்றி பெற்று இருக்கின்றனர்.
தேர்ச்சி சதவீதம் 54.45 ஆகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் 99 ஆயிரத்து 610 பேர் தேர்வு எழுதியதில், 57 ஆயிரத்து 215 பேர் வெற்றி பெற்று இருந்தனர். இதன் தேர்ச்சி சதவீதம் 57.43 ஆகும். அந்த வகையில் பார்க்கும்போது, கடந்தாண்டை விட தமிழ்நாட்டிலும் தேர்ச்சி சதவீதம் குறைந்து இருக்கிறது.
தமிழ்நாட்டு மாணவர் முதலிடம்
நீட் தேர்வு மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. அந்த வகையில் நேற்று தேர்வு முடிவு வெளியானதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் ஜெ.பிரபஞ்சன், ஆந்திராவைச் சேர்ந்த போரா வருண் சக்கரவர்த்தி ஆகியோர் 720-க்கு 720 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் முதல் இடத்தை பகிர்ந்துள்ளனர்.
அதிக மதிப்பெண் பெற்ற முதல் 50 பேர் பட்டியலில் ஜெ.பிரபஞ்சன், கவுஸ்ஸ்டவ் பவுரி (716), சூர்யா சித்தார்த் (715), எஸ்.வருண் (715), சாமுவேல் ஹர்ஷித் (711), ஜேக்கப் பிவின் (710) ஆகிய 6 பேர்தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
முறைகேடாக தேர்வு எழுதிய 7 பேர்
மதிப்பெண்ணை பொறுத்தவரையில் 720 மதிப்பெண்ணில் இருந்து 137 மதிப்பெண் வரை 10 லட்சத்து 14 ஆயிரத்து 372 பேர் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற பிரிவினரில் ஓ.பி.சி. பிரிவில் 5 லட்சத்து 25 ஆயிரத்து 194 பேரும், எஸ்.சி. பிரிவில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 674 பேரும், எஸ்.டி. பிரிவில் 56 ஆயிரத்து 381 பேரும், பொது பிரிவில் 3 லட்சத்து 12 ஆயிரத்து 405 பேரும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரில் 98,322 பேரும் என மொத்தம் 11 லட்சத்து 45 ஆயிரத்து 976 பேர் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர்.
நீட் தேர்வில் 7 பேர் முறைகேடாக தேர்வு எழுதியது அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீது விதிமுறைகளின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
ஆசிரியர் மகன்
'நீட்' தேர்வில் சாதித்த மாணவர் பிரபஞ்சனின் தந்தை ஜெகதீஷ் ஆசிரியர் ஆவார். இவர், விழுப்புரம் மாவட்டம் மேல் ஒலக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பிரபஞ்சனின் தாயார் மாலாவும் அரசு பள்ளி ஆசிரியை ஆவார்.