ஒரு வார காலத்திற்குள் தீர்வு காண வேண்டும்


ஒரு வார காலத்திற்குள்  தீர்வு காண வேண்டும்
x

ஒரு வார காலத்திற்குள் தீர்வு காண வேண்டும்

திருப்பூர்

அனுப்பர்பாளையம்

தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு தொடர்பாக பாத்திர உற்பத்தியாளர்கள் ஒரு வார காலத்திற்குள் பேசி தீர்வு காண வேண்டும் என்று அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாத்திரம் தயாரிப்பு

திருப்பூர் அனுப்பர்பாளையம் மற்றும் சுற்று வட்டாரத்தில் எவர்சில்வர், பித்தளை, செம்பு உள்பட 300-க்கும் மேற்பட்ட பாத்திர பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு பணியாற்றும் பாத்திர தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு ஒப்பந்தம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், புதிய கூலி உயர்வு தொடர்பாக அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டி கூட்டம் கடந்த 19-ந்தேதி நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் எவர்சில்வர் பாத்திர வகைகளுக்கு 50 சதவீதமும், பித்தளை, தாமிரம், வார்ப்பு வகைகளுக்கு 60 சதவீதமும், ஈயப்பூச்சுக்கு 70 சதவீதமும் கூலி உயர்வு கேட்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இது தொடர்பாக எவர்சில்வர் மற்றும் பித்தளை பாத்திர உற்பத்தியாளர் சங்கங்களுக்கு கோரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்டது.

பாத்திர தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு தொடர்பாக அனைத்து பாத்திரத்தொழிற்சங்கங்களின் கூட்டுக் கமிட்டி அனுப்பிய கடிதம் தொடர்பாக திருப்பூர் வட்டார முழுக்கூலி பாத்திர பட்டறைதாரர் சங்க நிர்வாகிகள் கடந்த 26-ந்தேதி ஆலோசனை நடத்தினார்கள். இதில் மூலப்பொருட்கள் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, வியாபார மந்தம், கொரோனா உள்பட பல்வேறு பிரச்சினைகளால் பாத்திர தொழில் நலிவடைந்துள்ளதால், தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கூலியையே அடுத்த ஓராண்டிற்கு வழங்குவது என்றும், தொழிலாளர்களுக்கான புதிய கூலி உயர்வுக்கு 1 ஆண்டு அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த முடிவை பாத்திரத் தொழிற்சங்கங்களின் கூட்டுக் கமிட்டிக்கு கடிதம் மூலமாக தெரியப்படுத்தினார்கள்.

கூட்டு கமிட்டி கூட்டம்

இந்த நிலையில் கூலி உயர்வு தொடர்பான அடுத்த கட்ட முடிவு எடுப்பதற்கான பாத்திரத்தொழிற்சங்கங்களின் கூட்டுக் கமிட்டி கூட்டம் அனுப்பர்பாளையத்தில் உள்ள சிஐடியு பாத்திரத் தொழிலாளர் சங்க அலுவலகத்தில் ந.வேலுச்சாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கே.ரங்கராஜ், குப்புசாமி, குபேந்திரன் (சி.ஐ.டி.யு), ச.செல்வராஜ், நாகராஜ் (ஏ.ஐ.டி.யு.சி),

எஸ்.பி.அர்சுனன், ஆறுமுகசாமி (காமாட்சியம்மன் சங்கம்),

வி.ஆர்.ஈஸ்வரன், அசோக் (ஐ.என்.டி.யு.சி), ந.வேலுச்சாமி, ரத்தினசாமி (எல்.பி.எப்), பாண்டியராஜ் (எச்.எம்.எஸ்), சீனிவாசன், லட்சுமிநாராயணன் (பி.எம்.எஸ்) உள்ளிட்ட சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பாத்திர உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், தற்போது வழங்கப்பட்டு வரும் கூலி அடுத்த ஒரு ஆண்டுக்கு வழங்கப்படும் என்ற முடிவை கூட்டுக் கமிட்டி முற்றிலும் நிராகரிப்பது, உற்பத்தியாளர்களின் இந்த முடிவு பாத்திர உரிமையாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் உள்ள நல்லுறவை பாதிக்கும்.

எனவே உற்பத்தியாளர்கள் தங்களின் நிலைப்பாட்டில் இருந்து மாற்றத்தை உருவாக்கி கூலி உயர்வு தொடர்பாக ஒரு வார காலத்திற்குள் அழைத்து பேசி தீர்வு காண வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

----------


Next Story