பேச்சுவார்த்தை தோல்வி: கலாசேத்ரா கல்லூரி மாணவ-மாணவிகள் 2-வது நாளாக போராட்டம்
கலாசேத்ரா கல்லூரி மாணவ-மாணவிகள் 2-வது நாளாக நேற்றும் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். அவர்களுடன் நிர்வாகக்குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
சென்னை,
சென்னை திருவான்மியூர் கலாசேத்ரா அறக்கட்டளையின் கீழ் வரும் நாட்டிய கல்லூரி மாணவிகளுக்கு, அந்த கல்லூரியின் பேராசிரியர் ஹரிபத்மன், உதவியாளர்கள் சாய் கிருஷ்ணன், சஞ்ஜித்லால், ஸ்ரீநாத் ஆகிய 4 பேர் பாலியல் தொந்தரவு அளிப்பதாக கூறி, கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று முன்தினம் மாலையில் இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தங்களுடைய குற்றச்சாட்டை விசாரித்து, சம்பந்தப்பட்ட 4 பேரை பணி இடைநீக்கம் செய்யும் வரை ஓயமாட்டோம் என்று நேற்று முன்தினம் மாணவ-மாணவிகள் திட்டவட்டமாக தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தை மாணவ-மாணவிகள் தொடர்ந்தனர்.
பேச்சுவார்த்தை தோல்வி
நேற்று, மாணவ-மாணவிகளிடம், கல்லூரியின் நிர்வாகக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
அப்போது அவர்களிடம் உங்கள் குற்றச்சாட்டை எழுத்துப் பூர்வமாக தெரிவியுங்கள், அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம் என்று தெரிவித்ததாகவும், ஆனால் மாணவ-மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றும், மத்திய-மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட பேராசிரியர் உள்பட 4 பேர் மீது நடவடிக்கை எடுப்பதை உறுதியளிக்கும் வரை போராட்டத்தை தொடருவோம் என்றும் கூறிவிட்டனர். இதனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
கல்லூரியில் தங்கி படிக்கும் மாணவ-மாணவிகளில் 90 சதவீதம் பேர் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் என்பதால், அவர்களுடைய பெற்றோரில் சிலர் கல்லூரிக்கு வந்தனர். ஆனால் அவர்களை மாணவ-மாணவிகளை பார்க்க உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் அவர்கள் நுழைவுவாயில் பகுதியில் காத்து கிடந்தனர். மேலும் கல்லூரி வளாகத்துக்குள் நடைபயிற்சி செய்வதற்கும் அனுமதி இருக்கிறது. நேற்று மாணவர்கள் போராட்டம் நடத்தியதால், நடைபயிற்சி செய்ய வந்தவர்களுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.
ஐதராபாத் நிகழ்ச்சி
இதற்கிடையில் குற்றச்சாட்டுக்குள்ளான பேராசிரியர் மற்றும் 3 பேருடன் 40 பேர் கொண்ட கலாசேத்ரா குழு, ஐதராபாத்தில் உள்ள சி.சி.ஆர்.டி. வளாகத்தில் நேற்று தொடங்கிய ராமாயண கல்பவர்க்சம் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்தது. ஆனால் இந்த பாலியல் தொந்தரவு விவகாரத்தால், அவர்கள் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்றும், அங்கிருந்து அவர்கள் சென்னை திரும்பினார்கள் .
மகளிர் ஆணையத் தலைவி விசாரணை
கலாசேத்ரா கல்லூரி மாணவிகள் முன்வைத்த பாலியல் குற்றச்சாட்டை தாமாக முன்வந்து கையில் எடுத்த மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமரி, நேற்று கல்லூரி மாணவ-மாணவிகளிடம் விசாரணை நடத்த வந்தார். சுமார் 5 மணி நேரம் மாணவ-மாணவிகளிடம் அவர் நேரில் விசாரித்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
2008-ம் ஆண்டில் இருந்தே...
மாணவ-மாணவிகளை தனித் தனியாக சந்தித்து விசாரணை நடத்தி இருக்கிறேன். 2008-ம் ஆண்டில் இருந்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருவதாக அவர்கள் புகாராக கூறியிருக்கின்றனர். 5 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில், 12 மாணவிகளிடம் நேரிலும், 5 பேரிடம் 'ஜூம்' செயலி வாயிலாக வீடியோவிலும் பேசி இருக்கிறேன்.
ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான குற்றச்சாட்டை தெரிவித்து இருக்கின்றனர். நான் அதை அறிக்கையாக அரசிடம் தெரிவிக்க உள்ளேன். 4 பேர் மீது குற்றச்சாட்டுகளை மாணவ-மாணவிகள் முன்வைத்து இருக்கிறார்கள்.
100-க்கும் மேற்பட்ட புகார்கள்
100-க்கும் மேற்பட்ட எழுத்துப் பூர்வமான புகார்களை என்னிடம் வழங்கி இருக்கிறார்கள். அதனை படித்துவிட்டுதான் எதையும் சொல்ல முடியும். கலாசேத்ரா கல்லூரியில் மாணவ-மாணவிகளிடம் விசாரணை நடத்தும் போது, கல்லூரி இயக்குனர், இணை இயக்குனர் இல்லை. முதல்வர் மட்டும் இருந்தார். கல்லூரி இயக்குனரிடம் நாளை (இன்று) விசாரணை நடத்த திட்டமிட்டிருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தாசில்தார் விசாரணை
இதேபோல், தாசில்தார் (சென்னை தெற்கு) அருளானந்தமும் பல மணி நேரம் மாணவ-மாணவிகளிடம் விசாரணை நடத்தி நேற்று மாலை திரும்பி சென்றார்.
மேலும் வருவாய் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் கொடுக்கும் அறிக்கையை வைத்து தமிழ்நாடு அரசு என்ன நடவடிக்கை எடுக்கும்? என்று போராட்டம் நடத்தி வரும் மாணவ-மாணவிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.