கோடை சீசனுக்கு தயாராகும் நேரு பூங்கா


கோடை சீசனுக்கு தயாராகும் நேரு பூங்கா
x
தினத்தந்தி 28 Feb 2023 12:15 AM IST (Updated: 28 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் நேரு பூங்கா கோடை சீசனுக்கு தயாராகிறது. அங்கு மலர் நாற்றுகள் நடும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரியில் நேரு பூங்கா கோடை சீசனுக்கு தயாராகிறது. அங்கு மலர் நாற்றுகள் நடும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நேரு பூங்கா

கோத்தகிரியில் உள்ள சுற்றுலாத்தலங்களில் முக்கியமான ஒன்றாக நகரின் மையப்பகுதியில் இருக்கும் நேரு பூங்கா விளங்குகிறது. இங்கு அழகிய புல் தரைகள், ரோஜா பூந்தோட்டம், சிறுவர் விளையாட்டு பூங்கா, நூற்றாண்டு பழமை வாய்ந்த கோத்தர் இன மக்களின் குல தெய்வமான அய்யனோர்-அம்மனோர் கோவில் ஆகியன உள்ளது. மேலும் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடைவிழாவையொட்டி தோட்டக்கலை துறை சார்பில் 2 நாட்கள் காய்கறி கண்காட்சி நடத்தப்படுகிறது. இதை காண நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.

இந்தநிலையில் கோடை சீசன் நெருங்கி வரும் வேளையில், பூங்காவை தயார்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பூங்காவை மேம்படுத்த ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பாதுகாப்பு சுவர்கள் கட்டும் பணிகள் நடைபெற்றது. மேலும் ரூ.5 லட்சம் செலவில் பூங்காவின் ஒரு பகுதியில் வண்ண விளக்குகளுடன் செயற்கை நீரூற்றும் அமைக்கப்பட்டது.

மலர் நாற்றுகள்

இதையடுத்து கடந்த 2 வாரத்திற்கு முன்பு 30 ஆயிரம் மலர் நாற்றுக்கள் நடும் பணி தொடங்கியது. பூங்கா வளாகத்தில் உள்ள கழிப்பிடங்கள் புதுப்பிக்கப்பட்டு, சுவர்களில் வனவிலங்குகளின் தத்ரூபமான ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. புல் தரைகளில் அதிகப்படியாக வளர்ந்துள்ள புற்கள் எந்திரம் மூலம் வெட்டி அகற்றப்படுகிறது. பூங்கா நுழைவு வாயிலில் டிக்கெட் வழங்கும் இடமும் அமைக்கப்பட்டு உள்ளது.

இதுமட்டுமின்றி சிறுவர் விளையாட்டு பூங்காவில் பழுதடைந்து இருந்த உபகரணங்களை அகற்றி, 9 விதமான புதிய உபகரணங்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதுபோன்ற பணிகள் நடப்பதால், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, பூங்கா மூடப்பட்டு உள்ளது. அங்கு பனிப்பொழிவு மற்றும் வெயிலில் புல்தரைகள், மலர் செடிகள் வாடிவிடாமல் தடுக்க தண்ணீர் பாய்ச்சும் பணியிலும், மீதமுள்ள நாற்றுகளை நடும் பணியிலும் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story