வீடு கட்ட மண் எடுத்ததால் பக்கத்து வீடுகள் பாதிப்பு ;பத்மநாபபுரம் சப்-கலெக்டர் நேரில் விசாரணை
வீடு கட்ட மண் எடுத்ததால் பக்கத்து வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சப்-கலெக்டர் விசாரணை நடத்தினார்.
புதுக்கடை,
வீடு கட்ட மண் எடுத்ததால் பக்கத்து வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சப்-கலெக்டர் விசாரணை நடத்தினார்.
சப்-கலெக்டர் விசாரணை
புதுக்கடை அருகே உள்ள மறுகண்டான்விளையை சேர்ந்தவர்கள் தாஸ், கிறிஸ்டோபர். இவர்கள் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டுவதற்காக அரசிடம் அனுமதி பெற்று மண் எடுத்தனர். அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் மண் எடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்தபகுதியைச் சேர்ந்தவர்கள் அரசுக்கு புகார் அனுப்பினர். இதையடுத்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் மண் எடுத்த பகுதியைச் சுற்றிலும் தடுப்புச் சுவர் கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதையடுத்து நிலத்தின் உரிமையாளர்கள் தடுப்புச் சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மண் எடுத்தை பகுதியையொட்டி உள்ள சுந்தர்ராஜ், ஷீபா, காளிதாஸ் ஆகியோரது வீடுகள் சேமடைந்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து அவர்கள் விளாத்துறை ஊராட்சித் தலைவர் ஓமனா மற்றும் வருவாய் ஆய்வாளரிடம் புகார் செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுஷிக் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அப்போது நில உரிமையாளர்களிடம் மண்எடுத்த பகுதியில் தடுப்பு சுவரை துரிதமாக கட்டி முடிக்கவும், இதை கிராம நிர்வாக அதிகாரி தினமும் கண்காணிக்க வேண்டும் என்றும், இது தொடர்பான அறிக்கையை கிராம நிர்வாக அதிகாரி தகவல் கூற வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.