வீட்டை பூட்டிக்கொண்டு மாந்திரீகம் செய்வதாக அக்கம் பக்கத்தினர் புகார்


வீட்டை பூட்டிக்கொண்டு மாந்திரீகம் செய்வதாக அக்கம் பக்கத்தினர் புகார்
x

ஆரணி அருகே வீட்டை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு மாந்திரீகம் செய்வதாக அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் பொக்லைன் எந்திரம் மூலம் கதவை உடைத்து போலீஸ்காரர் உள்பட 6 பேர் மீட்கப்பட்டனர்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி அருகே வீட்டை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு மாந்திரீகம் செய்வதாக அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் பொக்லைன் எந்திரம் மூலம் கதவை உடைத்து போலீஸ்காரர் உள்பட 6 பேர் மீட்கப்பட்டனர்.

மாந்திரீகம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் ஊராட்சிக்குட்பட்ட தசராபேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தவமணி (வயது 55), நெசவு தொழிலாளி.

இவருக்கு காமாட்சி என்ற மனைவியும், பூபாலன், பாலாஜி ஆகிய 2 மகன்களும், கோமதி என்ற மகளும் உள்ளனர். கோமதியின் கணவர் அரியப்பாடி கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ். இதில் பூபாலன் சென்னை தாம்பரம் ஆயுதப்படை போலீசில் வேலை செய்து வருகிறார்.

இவர்கள் 6 பேரும் கடந்த 3 நாட்களாக வீட்டை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு மாந்திரீகம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை முதல் கதவை திறக்காமல் மந்திரம் மட்டும் ஓதிக்கொண்டு வருவதாக அக்கம்பக்கத்தில் உள்ள பொதுமக்கள் வருவாய்த்துறைக்கும், காவல்துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து தாசில்தார் ஆர்.ஜெகதீசன், தீயணைப்பு துறை அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் படை வீரர்களும் சென்றனர். ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

6 பேரை மீட்டனர்

சுமார் 5 மணி நேரம் போராடியும் அவர்கள் வீட்டுக்குள் இருந்து வெளியே வராமல் இருந்தனர்.

அவர்களை வெளியே வருமாறு அழைத்தபோது, நாங்கள் மாந்திரீகம் செய்கிறோம். எங்கள் பூஜையை தடை செய்ய வேண்டாம். நீங்கள் வெளியே செல்லுங்கள் என குரல் கொடுத்து வந்துள்ளனர்.

நீண்டநேர போராட்டத்துக்கு பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு முன் கதவை உடைத்து வீட்டின் உள்ளே இருந்த 6 பேரையும் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் மீட்டனர்.

அப்போது வெளியே வந்த அவர்கள், கோமதிக்கு பேய் பிடித்திருப்பதாகவும் அதனால் மாந்திரீகம் மூலம் அவருக்கு பேய் விரட்டும் பூஜை நடத்தி வருவதாகவும் கூறினர். இந்த பூஜையை கோமதியின் கணவர் பிரகாஷ் செய்து வந்தார்.

நரபலி

மேலும் இதுசம்பந்தமாக இன்று இரவு அவர்கள் நரபலி கொடுக்க இருந்ததாகவும் கூறப்படுகிறது

இதற்கிடையே போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் வீட்டில் பூஜையில் வைக்கப்பட்டு இருந்த பொம்மை உள்ளிட்ட பொருட்களை வெளியே கொண்டு வந்து போட்டு தீயிட்டு கொளுத்தினர்.

மேலும் மீட்கப்பட்ட போலீஸ்காரர் உள்பட 6 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தால் வீட்டு முன்பு அந்த பகுதியினர் திரண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story