நெல் நடவுக்கு தயாரான நாற்றுக்கள்
முத்தூர் கீழ்பவானி பாசன பகுதிகளில் சம்பா நெல் பயிர் சாகுபடி நடவுக்காக வயல்களில் நெல் நாற்றுக்கள் தயாராக உள்ளன.
கீழ்பவானி பாசன பகுதிகள்
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்ட கீழ்பவானி பாசன பகுதிகளுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 12-ந் தேதி முதல் வருகிற டிசம்பர் மாதம் இறுதி வரை நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்காக கால்வாய் வழியாக தொடர் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த தண்ணீரை பயன்படுத்தி முத்தூர், சின்னமுத்தூர், ஊடையம், வேலம்பாளையம், மங்களப்பட்டி, பூமாண்டன்வலசு, ராசாத்தாவலசு, வள்ளியரச்சல், மேட்டுப்பாளையம் ஆகிய வருவாய் சுற்று வட்டார கீழ்பவானி பாசன பகுதிகளில் இந்த ஆண்டு சுமார் 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நஞ்சை சம்பா நெல் சாகுபடி பணிகள் தொடங்கப்பட உள்ளன.
இதன்படி நஞ்சை சம்பா நெல் சாகுபடியில் முதல் கட்டமாக இப்பகுதி கீழ்பவானி பாசன விவசாயிகள் ஐ.ஆர்.20, கோ.ஆர் 50, கோ.ஆர்.51, ஏ.டி.டி.45, டீலக்ஸ் பொன்னி உட்பட பல்வேறு ரக சான்று பெற்ற விதை நெல்களை அரசு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தனியார் விதை நெல் விற்பனை நிலையங்களில் வாங்கி வந்து இருப்பு வைத்திருந்தனர். இதனை தொடர்ந்து கடந்த மாத இறுதியில் அதாவது கடந்த 25 நாட்களுக்கு முன்பு தங்களது வயல்களில் நெல் நாற்று உற்பத்தி பணிகளை தொடங்கினர்.
நெல் நாற்றுக்கள் உற்பத்தி
இதன்படி இப்பகுதி விவசாயிகள் முதல் கட்டமாக நஞ்சை சம்பா நெல் சாகுபடி நடைபெறும் வேளாண் வயல்களில் ஒரு பகுதிகளில் சேற்று வயல் அமைத்து நீரை அதிக அளவு நிரப்பி அதில் விதை நெல் மணிகளை வயல் முழுவதும் தூவி விட்டு நெல் நாற்றுக்கள் உற்பத்தி பணிகளை தொடங்கினர்.
மேலும் நெல் நாற்றுக்கள் உற்பத்தி செய்யும் வயல்களில் தண்ணீர் வற்றாமல் இருக்கும் வண்ணம் நீர் நிரம்பி தேக்கி வைத்தனர். தொடர்ந்து தண்ணீர்நிரப்பப்பட்ட வயலில் நெல் விதைகளை தூவி விட்டனர். இதனை தொடர்ந்து விதை நெல்கள் துவப்பட்ட சுமார் 16 நாட்களுக்கு பிறகு நெல் நாற்றுக்கள் பச்சை நிறத்தில் லேசாக முளைத்து மேலே எழும்பியது. அதன் பின்பு தற்போது இந்த நெல் நாற்றுக்கள் பச்சை, பசேலென்று நன்கு வளர்ந்து பசுமையாய் நெல் நடவு பணிகளுக்கு தயாராகி உள்ளது. இதனை தொடர்ந்து நஞ்சை சம்பா நெல் சாகுபடியில் 2-ம் கட்டமாக இன்னும் ஒரு சில நாட்களில் நெல் நாற்று நடவு பணிகள் தொடங்கப்பட உள்ளன. இதன்படி இப்பகுதிகளில் டிராக்டர் மூலம் சேற்று உழவு செய்யப்பட்டு வயல்களில் நீர் தேக்கி வைக்கப்பட்டு சேற்று வயல் அமைத்து கூலி ஆட்கள் மூலம் நெல் நாற்று நடவு பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதன்படி இப்பகுதிகளில் நெல் நாற்று நடவு பணிகள் சுமார் ஒரு மாதங்களுக்கு மேல் முழுவீச்சில் இடைவிடாது தொடர்ந்து நடைபெறும்.
பலத்த மழை
மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக முத்தூர் சுற்றுவட்டார கீழ்பவானி பாசன பகுதிகளில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பகல், இரவு நேரங்களில் அவ்வப்போது பெய்த சாரல், மிதமான, பலத்த தொடர் மழை நீர் மற்றும் கீழ்பவானி பாசன கால்வாய் தண்ணீர் ஆகியவற்றின் மூலம் தொடங்கப்பட்டு உள்ள நஞ்சை சம்பா நெல் சாகுபடி வழக்கம்போல் இந்த ஆண்டும் விவசாயிகளுக்கு கூடுதல் பலன் அளிக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.