நெல்லை-சென்னை 'வந்தே பாரத்' ரெயில் சோதனை ஓட்டம் வெற்றி
நெல்லை-சென்னை இடையே ‘வந்தே பாரத்’ ரெயில் சோதனை ஓட்டம் நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது.
ரெயில்வே துறையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, நவீன சொகுசு ரெயிலாக 'வந்தே பாரத்' ரெயில் இயக்கப்படுகிறது. இதில் ஒரு ரெயில் சென்னை - நெல்லை இடையே நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் இயக்கப்படுகிறது. இதற்கான ரெயில் பெட்டிகள் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து நெல்லைக்கு கொண்டு வரப்பட்டது.
சோதனை ஓட்டம் வெற்றி
இந்த ரெயில் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. கால அட்டவணைபடி நேற்று காலை 6 மணிக்கு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தின் முதலாவது பிளாட்பாரத்தில் இருந்து புறப்பட்டது. இந்த ரெயில் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப்பாய்ந்து சென்றது.
விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே 'வந்தே பாரத்' ரெயில் சென்றது. அதை தொடர்ந்து சென்னை எழும்பூரை சென்றடைந்தது. 7.50 மணி நேரத்தில், அதாவது பிற்பகல் 1.50 மணிக்கு செல்ல வேண்டிய ரெயில் முன்கூட்டியே சென்றடைந்தது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது. பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் நெல்லை -சென்னை 'வந்தே பாரத்' ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைக்கிறார். நெல்லையில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மேயர் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை
இதுகுறித்து மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் ஆனந்த் கூறியதாவது:- 'வந்தே பாரத்' ரெயில் காலை 6 மணிக்கு சோதனை ஓட்டத்தை தொடங்கியது. ரெயில்வே துறையால் அறிவிக்கப்பட்ட நேரத்தில் சரியான நேரத்தில் செல்கிறதா? என்பது தொடர்பாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. காலை 6 மணிக்கு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட 'வந்தே பாரத்' சரியாக மதுரைக்கு 7.45 மணிக்கு வந்து சேர்ந்தது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட 5 நிமிடத்திற்கு முன்பாகவே மதுரைக்கு வந்தது.
நவீன வசதியுடன் இருக்கைகள், விமானத்தில் செல்வது போல அனைத்து வசதிகளும் இந்த ரெயிலில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரெயிலின் வேகத்தை மணிக்கு 110 கிலோ மீட்டரில் இருந்து 130 கிலோ மீட்டராக அதிகரிக்க தண்டவாளங்களை மேம்படுத்தப்படும் பணி முதற்கட்டமாக திண்டுக்கல் முதல் திருச்சி வரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
படுக்கை வசதி
தற்போது 'வந்தே பாரத்' ரெயிலானது, இருக்கையில் பயணிகள் அமர்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு இரவு நேரங்களில் 'வந்தே பாரத்' ரெயில் இயக்குவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக இரவு நேரங்களில் படுக்கை வசதியுடன் 'வந்தே பாரத்' ரெயில் இயக்குவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.