நெல்லை-சென்னை 'வந்தே பாரத்' ரெயில் வருகிற 24-ந் தேதி முதல் இயக்கம்
நெல்லை-சென்னை ‘வந்தே பாரத்’ ரெயில் வருகிற 24-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது. இதனை பிரதமர் மோடி காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார் என்று மதுரை கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் தெரிவித்தார்.
இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், அதிநவீன வசதிகளுடன் கூடிய 'வந்தே பாரத்' ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் முதன்முதலாக கடந்த ஏப்ரல் மாதம் சென்னை-கோவை இடையிலான 'வந்தே பாரத்' ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து தென்மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், நெல்லை-சென்னை இடையே 'வந்தே பாரத்' ரெயில் சேவை இயக்க திட்டமிடப்பட்டது. நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இந்த ரெயில் பெட்டிகளை பராமரிப்பதற்கான பிட்லைன் அமைக்கும் பணிகள் துரிதமாக நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து நெல்லை-சென்னை இடையிலான 'வந்தே பாரத்' ரெயில் வருகிற 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் இயக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திரமோடி காணொலிக்காட்சி மூலம் இந்த ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.
இதற்கான முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்வதற்காக, தெற்கு ரெயில்வே மதுரை கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த், முதுநிலை வணிக மேலாளர் ரவிபிரியா, முதுநிலை கோட்ட இயக்க மேலாளர் பிரசன்னா உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்தனர். ரெயில் நிலையத்தில் விழா மேடை அமைக்கப்படும் இடம், வந்தே பாரத் ரெயில் நிறுத்தப்படும் தண்டவாளம், நடைமேடை, ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும் பிட்லைன், டிக்கெட் முன்பதிவு கவுண்ட்டர்கள் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் மதுரை கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் நிருபர்களிடம் கூறியதாவது;-
நெல்லை-சென்னை 'வந்தே பாரத்' ரெயில் வருகிற 24-ந்தேதி முதல் இயக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு வந்ததை தொடர்ந்து விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டோம். வருகிற 24-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் 9 'வந்தே பாரத்' ரெயில்களை தொடங்கி வைக்கிறார். இதில் நெல்லை- சென்னை இடையே இயக்கப்படும் ரெயிலும் ஒன்று. முதற்கட்டமாக இந்த ரெயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி ஆகிய 4 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
நெல்லையில் இந்த ரெயில் தொடக்க விழாவுக்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தை மேம்படுத்த திட்ட வரையறை தயார் செய்து, வல்லுனர் குழுவுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய மேலாளர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.