களக்காடு-முண்டந்துறை வனப்பகுதியை பாதுகாக்க நெல்லை கலெக்டருக்கு உத்தரவு


களக்காடு-முண்டந்துறை வனப்பகுதியை பாதுகாக்க நெல்லை கலெக்டருக்கு உத்தரவு
x

இரவு நேரத்தில் வாகனங்கள் செல்ல தடை கேட்ட வழக்கில், களக்காடு-முண்டந்துறை வனப்பகுதியை பாதுகாக்க நெல்லை கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கும்படியும், அதற்கு 8 வார கெடு விதித்தும் மதுரை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

மதுரை

இரவு நேரத்தில் வாகனங்கள் செல்ல தடை கேட்ட வழக்கில், களக்காடு-முண்டந்துறை வனப்பகுதியை பாதுகாக்க நெல்லை கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கும்படியும், அதற்கு 8 வார கெடு விதித்தும் மதுரை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

வாகனங்களுக்கு அனுமதி கூடாது

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த தனசேகரன், மதுரை ஐகோர்ட்டில் கடந்த 2015-ம் ஆண்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

களக்காடு-முண்டந்துறை புலிகள் சரணாலய பகுதியை பாதுகாக்கும் நடவடிக்கையாக பாபநாசம் சோதனைச்சாவடி வழியாக மாலை 6 மணி முதல் தொடங்கி இரவு முழுவதும் மட்டுமின்றி அதிகாலை 6 மணி வரை வாகனங்கள் செல்லவும், வனப்பகுதிக்குள் வாகனங்களை நிறுத்தவும் தடை விதிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் பாபநாசம் முதல் காரையாறு வரை வாகனங்களின் வேகத்தை குறைக்கும் வகையில் வேகத்தடைகளை அமைக்க வேண்டும்.

வனப்பகுதிக்குள் வாகனங்கள் ஒலி எழுப்புவதை குறைக்க வேண்டும். முகாம் அமைக்க அனுமதிக்கக்கூடாது. வனப்பகுதிக்குள் பிளாஸ்டிக் மற்றும் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்.

அபராதம் விதிக்க வேண்டும்

சொரிமுத்து அய்யனார் கோவில் திருவிழாவின் போதும் கோவிலுக்கு வெளியில் கூடாரம் அமைப்பது, நீண்ட நேரம் தங்குவது, பிளாஸ்டிக், மதுபாட்டில்கள் பயன்பாடு போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மதுபானங்கள் கொண்டு சென்றால் அபராதம் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். காரையாறு அணையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்க வேண்டும். இதுதொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்டவற்றை அமல்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

நெல்லை கலெக்டருக்கு உத்தரவு

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில், மனுதாரர் வக்கீலாக பணியாற்றுகிறார். சுற்றுச்சூழலுக்கான ஆய்வை ஒரு அமைப்பு நடத்தியது. அந்த அமைப்பு வழங்கிய வழிகாட்டுதல்களை பின்பற்றி களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்தை பாதுகாப்பதற்காக மனுதாரர் உரிய அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். உரிய நடவடிக்கை இல்லை என்பதால் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

மனுதாரரின் மனுவை பரிசீலிக்க உத்தரவிட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மனுதாரரின் மனுவை நெல்லை மாவட்ட கலெக்டர் 8 வாரத்தில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.


Related Tags :
Next Story