நெல்லை மாநகராட்சி மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்


நெல்லை மாநகராட்சி மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
x

நெல்லை மாநகராட்சி மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழக நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடேச பாண்டியன் தலைமையில் கொடுத்த மனுவில், ''நெல்லை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறிஉள்ளனர்.

ஆதிதமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் கொடுத்த மனுவில், பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகர் துப்புரவு பணியாளர் குடியிருப்பில் வீடுகள் தற்போது காலி செய்யப்பட்டு புதிய கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அங்கு வசித்த 366 குடும்பத்தினர் வேறு இடங்களுக்கு வாடகைக்கு செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். எனவே அவர்களுக்கு தற்காலிகமாக குடியிருக்க குடியிருப்புகள் அமைத்து தரவேண்டும்' என்று கூறிஉள்ளனர்.

பாளையங்கோட்டை அண்ணா நகர் மக்கள் பெரியசாமி தலைமையிலும், பாளையங்கோட்டை கோட்டூர் ரோடு பகுதி மக்கள் அப்துல்காதர் தலைமையிலும் தங்கள் பகுதியில் குடிநீரில் சாக்கடை கலப்பதை தடுக்க கோரி மனு கொடுத்தனர். மேலப்பாளையம் பொது நலக்குழு அளித்த மனுவில், மேலப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர். இதே போல் பல்வேறு பகுதி மக்கள் கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர். கூட்டத்தில் செயற்பொறியாளர் பாஸ்கர், உதவி ஆணையாளர் வெங்கட்ராமன், உதவி செயற்பொறியாளர் பைஜூ ஆகியோர் கலந்து கொண்டனர்.



Next Story