நெல்லை- செங்கோட்டை பயணிகள் ரெயில் மீண்டும் இயக்கம்
கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட நெல்லை- செங்கோட்டை பயணிகள் ரெயில் மீண்டும் இயக்கப்பட்டது.
நெல்லை:
கொரோனாவுக்கு முன்பாக நாளொன்றுக்கு 4 முறை திருச்செந்தூர், செங்கோட்டைக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரெயில், கொரோனாவுக்கு பின்னர் காலை, மாலை என 2 முறை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் 2 வழித்தடங்களிலும் ரெயில்களை பழையபடி 4 முறை இயக்கவேண்டும் என ரெயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் அடிப்படையில் தென்னக ரெயில்வே சார்பில் செங்கோட்டை, திருச்செந்தூருக்கு கூடுதலாக ரெயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நெல்லை-செங்கோட்டை பயணிகள் ரெயில் நேற்று மாலை 6.20 மணிக்கு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து செங்கோட்டைக்கு புறப்பட்டு சென்றது. 2 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கப்பட்டதால் இந்த ெரயிலில் பயணிகள் அதிக அளவில் பயணம் செய்தனர். செங்கோட்டை-நெல்லை காலை ரெயில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதலும் இயக்கப்பட உள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.