நெல்லையப்பர் கோவில் யானைக்கு காலணிகள்
நெல்லையப்பர் கோவில் யானைக்கு காலணிகள் வழங்கப்பட்டது.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதிக்கு 52 வயது ஆகிறது. இந்த யானை உடல் எடை அதிகரித்ததால் தினமும் உடற்பயிற்சியும், மூலிகை உணவும் வழங்கப்படுகிறது. வயது முதிர்வு காரணமாக சாலையில் யானை நடந்து செல்லும் போது மிகவும் கவனத்துடன் அழைத்துச் செல்லும் நிலை உள்ளது.
இந்த நிலையில் இந்து வியாபாரிகள் சங்கம் மற்றும் பக்தர்கள் சார்பில் யானை காந்திமதிக்கு புதிதாக காலணிகள் வழங்கப்பட்டு உள்ளது. ரூ.12 ஆயிரம் செலவில் பிரத்யேகமாக யாரிக்கப்பட்ட இந்த காலணிகளை கோவில் அதிகாரிகளிடம் பக்தர்கள் சார்பில் ஒப்படைக்கப்பட்டது.
இதைதொடர்ந்து டாக்டர்கள் ஆலோசனைபடி யானைக்கு காலணிகள் அணிவித்து பயிற்சி அளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில், தினமும் சுவாமி ரதவீதியில் உலா வரும்போது யானை காந்திமதி கம்பீரமாக முன்பாக அழைத்து செல்லப்படுவது வழக்கம் ஆகும். அப்போது அலங்காரத்துடன் கால்களில் வெள்ளி சலங்கை கட்டி யானையை காந்திமதி ரத வீதிகளில் வலம் வரும். இந்த ஆண்டு புதிய வரவான காலணியும் அணிந்து புதிய தோற்றத்தில் யானை வலம் வர இருக்கிறது.