நிரம்பும் நிலையில் நெல்லூர்பேட்டை ஏரி
நிரம்பும் நிலையில் நெல்லூர்பேட்டை ஏரி உள்ளது.
நிரம்பும் நிலையில் நெல்லூர்பேட்டை ஏரி உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியாக குடியாத்தம் நெல்லூர் பேட்டை பெரிய ஏரி என்கிற செருவங்கி ஏரி விளங்குகிறது. 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் 100 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்கலாம். மாண்டஸ் புயல் காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததால் ஏரி நிரம்பும் தருவாயில் கடல்போல் காட்சியளிக்கிறது.
இந்த நிலையில் குடியாத்தம் பகுதியில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நெல்லூர் பேட்டை பெரிய ஏரியை நேற்று மாலையில் அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன், தாசில்தார் எஸ்.விஜயகுமார், குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
குடியாத்தம்-பேரணாம்பட்டு சாலையில் நெல்லூர்பேட்டை ஏரிக்கரை அருகே திருமண மண்டபங்கள் மற்றும் பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பகுதியில் பல நாட்களாக மழைநீர் தேங்கி போக்குவரத்துக்ககு இடையூறு ஏற்பட்டு வந்தது. இதனை பார்வையிட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.