நெல் சாகுபடிக்கு தேவையான உரங்கள் இருப்பு


திருப்பூர்


திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் பேசும்போது, 'திருப்பூர் மாவட்டத்தின் இயல்பான வருடாந்திர மழை அளவு 618.20 மில்லி மீட்டராகும். கடந்த ஜூலை மாதம் வரை சராசரியாக 198.2 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். இதுவரை 298.97 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது சராசரி மழை பொழிவை விட 100.77 மில்லி மீட்டர் அதிகமாகும். பயிர் சாகுபடிக்கு தேவையான நெல் மற்றும் பிற பயறு வகை தானியங்கள், விதைகள் போதிய அளவு இருப்பில் உள்ளது.

அமராவதி அணையில் இருந்து நீர் வரத்து தொடங்கியதால் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் வட்டாரங்களில் நெல் சாகுபடி செய்ய விவசாயிகள் தங்களுடைய விவசாய நிலங்களை தயார் செய்து உள்ளனர். கீழ்பவானி பாசன பகுதிகளான காங்கயம், வெள்ளகோவில் பகுதிகளில் நெல் சாகுபடி சம்பா பருவத்தில் தொடங்கப்பட உள்ளது. நெல் சாகுபடிக்கு தேவையான யூரியா, பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் உரங்கள் தேவையான அளவு இருப்பில் உள்ளது. யூரியா 1,742 டன்னும், டி.ஏ.பி. 692 டன்னும், காம்ப்ளக்ஸ் 3,533 டன்னும், சூப்பர் பாஸ்பேட் 584 டன்னும் இருப்பில் உள்ளது' என்றார். கூட்டத்தில் 130 விவசாயிகள் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

இதில் இணை இயக்குனர் (வேளாண்மை) சின்னசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சீனிவாசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மகாதேவன், துணை இயக்குனர் (வேளாண்மை) சுருளியப்பன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.


Next Story