கம்பம் பள்ளத்தாக்கில் மரங்களில் கூடு கட்டும் தூக்கணாங்குருவிகள்
கம்பம் பள்ளத்தாக்கில் மரங்களில் தூக்கணாங்குருவிகள் கூடு கட்டி வருகின்றன.
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முல்லைப்பெரியாற்றின் கரையோரம் பசுமையான வயல்வெளிகள் உள்ளன. இரை தேடி இந்த வயல்வெளிகளுக்கு கொக்கு, மயில், புறா, தூக்கணாங்குருவி உள்ளிட்ட பறவைகள் வருவது வழக்கம். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக தூக்கணாங்குருவிகள் அதிக அளவில் கம்பம் பள்ளத்தாக்கு வயல்வெளிகளுக்கு வருகின்றன. தற்போது தூக்கணாங்குருவிகளின் இனப்பெருக்க காலமாகும். இதனால் கம்பம் பள்ளத்தாக்கு வயல்வெளிகளுக்கு வரும் தூக்கணாங்குருவிகள், அங்குள்ள மரங்களில் கூடு கட்டி வருகின்றன.
மற்ற பறவைகள் கட்டும் கூடுகளை காட்டிலும், தூக்கணாங்குருவிகள் கட்டும் கூடுகள் வித்தியாசமானவை. அவற்றின் கூடுகள் தலைகீழாக தொங்குவது போன்று இருக்கும். அந்த வகையில் குறிப்பாக அவை, நீர்நிலையை ஒட்டியுள்ள உயரமான தென்னை, பனை, வேம்பு மற்றும் கருவேல மரங்களில் கூடுகளை கட்டி வருகின்றன. தூக்கணாங்குருவிகள் கட்டியுள்ள இந்த கூடுகள், விவசாயிகள், பொதுமக்கள் மட்டுமின்றி தேனி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளன.