வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய செயலி


வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய செயலி
x

சேலம் மாநகரில் வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய செயலியை போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி அறிமுகப்படுத்தினார்.

சேலம்

சேலம் மாநகரில் வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய செயலியை போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி அறிமுகப்படுத்தினார்.

புதிய செயலி அறிமுகம்

சேலம் நெத்திமேடு பகுதியில் உள்ள போலீசார் சமுதாய கூடத்தில் வடமாநில தொழிலாலர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக புதிய செயலி அறிமுக விழா நடைபெற்றது. இதில் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி கலந்து கொண்டு புதிய செயலியை அறிமுகம் செய்தார். இதையடுத்து அவர் இந்த செயலி குறித்து விளக்கம் அளித்தார். அதைத்தொடர்ந்து போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சேலத்தில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் குறித்த முழு விவரங்களை அறிவதற்காகவும், அவர்களது பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் புதிதாக செயலி ஒன்று தொடங்கி உள்ளோம். இதில் வடமாநில தொழிலாளர்கள் எங்கிருந்து வந்துள்ளனர். எந்த நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்கள். எத்தனை ஆண்டுகள் பணியாற்றி வருகின்றனர். தற்போது எங்கு வசித்து வருகிறார்கள் என்பன குறித்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு

புதிதாக தொடங்கப்பட்ட இந்த செயலில் பாதுகாப்பாக இருக்கிறேன், இல்லை என்ற பட்டன் உள்ளன. பாதுகாப்பாக இருக்கிறேன் என்ற பட்டனை அழுத்தினால் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வரும். இதேபோல் ஏதேனும் உதவி தேவை என்றால் இல்லை என்ற பட்டனை அழுத்தினால் அலாரம் சவுண்டுடன் ஒலிக்கும். இதையடுத்து ரோந்து போலீசார் அங்கு சென்று அவர்களுக்கு தேவையான உதவியை செய்வார்கள். இதற்காக தனிக்குழு அமைத்து போலீசார் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா, மாடசாமி மற்றும் அதிகாரிகள் வழங்கினர்.

குறைகள் கேட்டறிந்தார்

இதையடுத்து போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி நெத்திமேடு பகுதியில் சாலையில் நடந்து சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். குறிப்பாக அவர் பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதனிடையே சேலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் வடமாநிலத்தினரை போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி நேரில் சந்தித்து ஆலோசனை வழங்கினார்.


Next Story