போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய ஏற்பாடு
வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய ஏற்பாடாக அப்பகுதி செவ்வக வடிவில் விரைவில் மாற்றப்படும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறினார்.
வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய ஏற்பாடாக அப்பகுதி செவ்வக வடிவில் விரைவில் மாற்றப்படும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறினார்.
வண்ண ஓவியங்கள்
வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மேம்பால சுவரின் இருபுறமும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அலங்கோலமாக காட்சியளித்தன.
மாநகரின் மையப்பகுதியில் காணப்படும் இந்த மேம்பால சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரைந்து அழகுப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன் முதற்கட்டமாக மேம்பால சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை அகற்றி, வெள்ளை நிற வண்ணம் பூசும் பணிகள் இன்று நடைபெற்றது.
இதனை கலெக்டர் குமாரவேல்பாண்டியன், ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மேயர் சுஜாதா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள், மேம்பால சுவர்களில் வரையும் ஓவியங்கள் தொடர்பாக ஆலோசனைகள் வழங்கினர்.
ஆய்வின்போது வேலூர் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், 2-வது மண்டலக்குழு தலைவர் நரேந்திரன், மாநகர நலஅலுவலர் முருகன், கட்டிட ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.
செவ்வக வடிவில் மாற்றம்
ஆய்வுக்கு பின்னர் கலெக்டர் கூறுகையில், வேலூர் மாநகராட்சி சார்பில் கிரீன் சர்க்கிள் பகுதியில் நெடுஞ்சாலை மேம்பால சுவர்களில் இருபுறமும் வண்ண ஓவியங்கள் தீட்டப்படுகிறது.
தமிழகம், வேலூர் மாவட்டம் மற்றும் மாநகராட்சியில் உள்ள முக்கிய இடங்கள், சிறப்பு அம்சங்கள் வண்ண ஓவியங்களாக வரைபட உள்ளது.
மேலும் கல்வித்துறை சார்பில் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிமுறைகள், அரசு சார்பில் வழங்கப்படும் பல்வேறு நிலதிட்டங்கள் போன்றவை பட விளக்கங்களாக இந்த மேம்பாலங்களில் வரையப்படும்.
கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய ஏற்பாடு சில மாதங்களில் செய்யப்படும். கிரீன் சர்க்கிள் பகுதி செவ்வக வடிவில் மாற்றி அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
மேலும் இப்பகுதியில் 'நம்ம வேலூர்' என்ற தலைப்பில் செல்பி பாயிண்ட் அமைக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு அலுவலக கட்டிடங்கள் மற்றும் மேம்பால சுவர்கள் வண்ண ஓவியங்கள் மூலம் அழகு படுத்தப்படும்.
வேலூர் புதிய பஸ்நிலையத்தில் இருந்து மேலும் 3 வழித்தடங்களுக்கு 4 நாட்களுக்குள் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.